நான் திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் வேலை செய்யும் போது நாங்கள் நண்பர்கள் ஒன்றாக கழக்கூட்டம் என்ற இடத்தில் தங்கி இருந்தோம்.
திருவனந்தபுரம் பொதுவாக இரவு 9 மணிக்கே கடை அடைத்து இரவு 12 மணி போல் தோற்றம் அளிக்கும். கழக்கூட்டம் டெக்னோபார்க்குக்கு அருகில் இருந்ததால் நள்ளிரவு வரை சில கடைகள் திறந்திருப்பதுண்டு.
சரி சொல்லவந்த விஷயம் என் வீடு இருந்த இடம் தான். டெக்னோபார்க் என்பது நம்மூர் டைடல் பார்க் மாதிரி. ஆனால், டெக்னோபார்க் வாசலை தாண்டி சற்று வெளியில் வந்தாலும் கும்மிருட்டாகத்தான் இருக்கும். ஒரே ஒரு சேச்சி கடை மட்டும் திறந்திருக்கும்.
என் வீட்டில்(வீடு என்று சொல்லவே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. பேச்சுலர்கள் தங்கினால் அது என்றுமே ரூம் தான் அது என்ன தான் பங்களாவாக இருந்தாலும் சரி) நான் ஒருவன் மட்டும் ஏடாகூட நேர ஷிப்ட்களில்(சத்தியமாக ஷிப்ட் தான். நடுவில் ப் இருக்கிறது) மாட்டிக்கொள்வேன்.
வீடு சில நிமிட (மலையாலத்தில் மினிட் :) ) நடைதூரத்தில் இருந்தாலும், வீடு செல்லும் வரை கும்மிருட்டு தான். இத்தனைக்கும் அது ஒரு நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது. அதை நினைத்தாலே குலை நடுங்கும் அளவுக்கு அப்படி ஒரு பகுதி. போதாக்குறைக்கு நாய்கள் வேறு. என் நண்பன் ஒருவனை ஒரு நாய் பழிவாங்கிவிட, நாய்களைக்கண்டாலே PM, one-to-one meeting-க்கு கூப்பிடும் போது பயப்படுவது போல செல்லவேண்டியதாயிற்று.
எங்கள் பகுதியின் பெயர் கழக்கூட்டம் என்பது கள்ளர்கள் அதிகம் இருந்ததால் வைக்கப்பட்ட பெயர் என்று போகிற போக்கில் ஒரு புண்ணியவான் கொளுத்திப்போட்டு விட்டு சென்றுவிட. எப்போதும் உயிர் பயத்துடனே செல்வேன்.
அந்நேரங்களில் என் ரூம்மேட் நண்பர்கள் அந்நேரம் பார்த்து SAW I, II,III Hostel, Wrong turn, Texas chainsaw massacre பட டிவிடிகளாக வாங்கி குவித்து என் பயத்திற்கு உரம் போட்டுக்கொண்டிருந்தனர். படம் பார்க்கும்போதென்னவோ கமெண்ட் அடித்து பெரிய இவன் போல் காட்டிக்கொண்டாலும் இரவு நேரங்களில் வரும்போது தான் அந்த பயம் தெரியும்.
இந்த ஃபார்வர்ட் மெயில் தெய்வங்கள் அந்த நேரத்தில் தான் அனுப்பி தொலைவார்கள், TCS அலுவலரை பெங்களூரில் விரல் வெட்டிவிடுவதாக மிரட்டி ஏ.டி.எம்(அழகிய தமிழ் மகன் அல்ல) கார்டை பிடிங்கிக்கொண்டார்கள், தலையில் கஜினி அசின் போல கம்பியால் தலையில் அடித்து பைக்கை பிடிங்கிகொண்டார்கள் என்றெல்லாம் கபோதித்தனமாக வந்து சேரும்.
அது என்னவோ தெரியவில்லை என்ன தான் பகுத்தறிவு பேசினாலும் இந்த இருட்டு பயம் மட்டும் போவதில்லை. என் காதலியுடன் ஒருநாள் இரவில் மொட்டை மாடியில் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது(இது கடலை அல்ல) பகுத்தறிவு பாடம் நடத்திக்கொண்டிருந்தேன்.
"இதோ பார் பேய், சூனியம், மந்திரம் இதெல்லாம் சும்மா டா. நம்பக்கூடாது"
"இல்லைங்க உங்களுக்கு தெரியாது, எங்க தெருவில ஒருத்தர் கால்ல எலுமிச்சம்பழம் மிதிச்சி ரெண்டு வாரம் கால்ல கட்டி வந்து கஷ்டப்பட்டாருங்க" (இங்கே "ங்க" விகுதி என் விருப்பத்திற்காக. உண்மை தலைகீழ்)
"நல்லா தெரியுமா? அவருக்கு அதனாலதான் கட்டி வந்துச்சா?"
"அப்படிதாங்க சொல்லிகிட்டாங்க"
உடனே நான் சுஜாதா பாதிப்பில்,
"எலுமிச்சம்பழத்துல இருக்கறது சிட்ரிக் இல்ல இல்ல டார்டாரிக் இல்ல சிட்ரிக் ஆசிட் தான். அதனால ஒரு மண்ணும் ஆகிருக்காது, அவருக்கு அதனால ஆகிருக்காது"
நான் தலையில் ஏறத்தொடங்கிவிட்டேன் என்று தெரியவந்ததும்,
"சரிங்க. அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க. நான் இப்பவே ஃபோன் லைன கட் பண்ணிடறேன் நீங்க மாடில இருந்து கீழே போய் பேசுங்க, என்கிட்ட பேசிகிட்டுதானே மாடி ஏறி வந்தீங்க. அவ்ளோ பயம் இருக்குல்ல"
"சரி சரி உனக்கு செமெஸ்டர் ரிசல்ட் எப்போ வருதுனு சொன்ன? நல்லா தானே எழுதிருக்க?"
அது சரி இருட்டுக்கு பயப்படுவது பகுத்தறிவுக்குள் வருகிறதா?
லேபிள் அனுபவம்
விவரம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு சொல்லுப்பா
அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
இது நம்பறா மாதிரி இல்லையே!!!!
அட ஆமாம். ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். நான் ஃபோன்ல தான்பா பேசிகிட்டு இருந்தேன். நமக்கு எல்லாம் இவ்வளவு தான்.