ஒருமுறை கல்லூரியில் ஒரு எழுத்தாள லெக்சரர், அனைவரிடமும் சும்மா ஏதாவது கேட்டுக்கொண்டு வர, எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும் என்று சொல்லியிராவிட்டால் சுஜாதாவுக்கு இப்படி நான் எழுதவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

புத்தகம் படிக்க பிடிக்கும் என்றதும், பிடித்த எழுத்தாளர் யார் என்றார்? சட்டென்று நினைவில் யாரும் வராததால் அப்படி எல்லாம் யாருமில்லை என்று மழுப்பினேன். உடனே இந்த சுஜாதா மாதிரி என்று இழுத்தார். உடனே அவசரமாக ஆமாம் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்.

தீர்மானம் செய்தபின் ரசிகனாவது கொஞ்சம் சுலபமாகத்தான் இருந்தது. அது வரை சுஜாதாவின் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற புத்தகங்களை மட்டும் வீட்டு வாசலில் இருந்த ஒரு சின்ன கட்டண நூலகத்தில் தூசி தட்டி படித்திருந்தேன். அந்த நூலகத்தில் தூசி மட்டுமே இலவசம். இதன் பின் மேலும் தேட, கொஞ்சம் கொஞ்சமாக கணேஷ் வசந்த் உட்பட பலர் அந்த தூசிக்குள் இருந்து வெளிவர ஆரம்பித்திருந்தனர். ஏன் எதற்கு எப்படி என்ற மார்பகப்பால் கொடுக்கும் ஒரு பெண்ணின் படம் சற்று கிழிக்கப்பட்ட புத்தகமும் அந்த நூலகத்தில் இருந்து கிடைத்தது. ”ஏன் எதற்கு எப்படி”யில் ”எதற்கு” என்ற வார்த்தையும், ”ஏன்” என்ற வார்த்தையும் எந்தவிதத்தில் மாறுபடுகின்றன என்ற சிந்தனையிலேயே அந்த புத்தகத்தை படித்து முடித்தேன். கிட்டத்தட்ட மனப்பாடம் செய்தேன்.

அதன் பிறகு தான் ஆரம்பித்தது என் புத்தகக்காதல். அவர் சொன்ன ஒவ்வொன்றையும் தேடித்தேடி படித்தேன். இணையத்தில் தேடினேன். ஏற்கனவே கற்றதும் பெற்றதும் படிக்கத்துவங்கியதால், ஒவ்வொரு புத்தகமாக வேட்டையாடினேன். ஒவ்வொரு வருடமும் வந்து செல்லும் நெய்வேலி புத்தக கண்காட்சியில் வெறும் சுஜாதா புத்தகமாக வாங்கி சேர்க்க ஆரம்பித்தேன். எனது தொகுப்பு நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கும்போது அதில் சில புத்தகங்களை என் நண்பன் தொலைத்து, பின் மீண்டும் அவற்றை தேடிப்பிடித்த கதையும் நடந்தது.

சுஜாதாவின் அழகு அவரது சிக்கனத்தில் இருந்தது. அவரது வார்த்தைச்சிக்கனம் ஒரு புத்திசாலித்தனமான ஒரு எழுத்தை அடையாளம் காட்டிற்று. அதேபோல் அவரது எழுத்து ஒவ்வொரு தலைமுறைக்கும் மீண்டும் பிறந்து அந்தந்த தலைமுறைக்கு புதிதான ஒரு சுவையான அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு, கணையாழியின் கடைசிப்பக்கங்களும், கற்றதும் பெற்றதுமும். இரண்டும் கிட்டத்தட்ட அவரது பத்தி எழுத்துக்களே, ஆனால் அவரது எழுத்து அந்தந்த காலத்தை ஒத்து உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்றைக்கும் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் ருசியாக இருப்பது போல் எழுதுவது நிச்சயமாக அவ்வளவு எளிதல்ல.

சினிமா மற்றும் கவிதைத்துறையில், அவரது கைவண்ணம் மிளிர்ந்தது. ஹைக்கூவுக்குள் அழகாக கையைப்பிடித்து அழைத்துச்சென்று, இது ஹைக்கூ இதைப்படி ஒரு அனுபவமாக இருக்கும், இதைப்படிக்காதே இது மடக்கி எழுதப்பட்ட உரைநடை இதைப்படித்தால் பின்னந்தலை வலிக்கும் என்று சொல்லித்தந்தார். திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகம் இன்றும் மிகப்பிரசித்தம். ஆனால் அந்த புத்தகத்தில் கண்ணெதிரே தோன்றினாள் படமும் வந்தது எப்படி என்று புரியவில்லை. இதைக்கூட பகுத்துணரும் தன்மையை அளித்தது அவரே.

பல ஆண்டுகள் அவரது வருடாந்திர அவார்டுகளும் எனது மனதில் நான் நினைத்த அவார்டுகளும் பல முறை ஒத்துப்போய் இருந்ததில் ஒரு சந்தோஷம். ஆனால் அவரால் எனக்கு கிடைக்காத ஒரே ஒரு விஷயம் அவரை சந்திக்கும் சந்தோஷம். ஆனால் அதற்கும் அவர் ஒரு நல்ல வாசகன் வகையில் என்னைச்சேர்த்துருப்பது சந்தோஷம்தான். “ஒரு நல்ல வாசகன் அவனுக்குப் பிடித்த எழுத்தாளனைச் சந்திக்க மாட்டான்” - சுஜாதா

சுஜாதா எனக்கு ஒரு ஆசானாகவே இருந்திருக்கிறார். ஒரு ஏகலைவனாக அவரைப்பின்பற்றுவதில் பெருமிதம் அடைகின்றேன்.

“வாழ்க்கையிலும் விசிஆர் மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்”

“No body dies..they live in the genes and memories of their children”

பிரபஞ்சத்தின் சூன்யவெளியில் நடந்துகொண்டிருந்தபோது,
சே எங்கிருந்து வந்தது உந்த கெட்ட பழக்கம், பிரபஞ்சம், சூனியம் என்ற கெட்டவார்த்தைகள்?

மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் உள்ள வினோதமான முரண்களை கடக்க நினைக்கையில்,
எங்கிருந்தோ வந்து தெறிக்கிறது எப்போதோ மன்னித்துவிட்டு வந்த நம்பிக்கைதுரோகத்தின் கடைசி பிசிறு

வரைமுறைக்குள் செல்ல நினைத்து சாலை கடக்கையில்,
வந்து முகத்தில் அறைந்து உமிழ்ந்து செல்கிறான், எதிர் பக்க பாதசாரி.
நன்றி திரு.பாதசாரி

மனதின் வலி மனதை தேடும் தேடலில் கலந்துவிடுகின்றது

எல்லாவற்றையும் கடந்து காசிக்கு செல்ல நினைக்கையில்
முதுகில் அடிக்கிறான் நான் கடவுள் ஆர்யா

கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் செல்லும் அளவு பயம் விட்டுவிடவில்லை மனதிற்கு

எரிந்த பிணங்களும் அவற்றின் வாசமும் எங்கும் வந்து கொல்லும்.
நன்றி ராஜபக்சே

இதுவரை எழுதியதை அழிக்கமுடியவில்லை, படிப்பவர்கள் அழித்துவிடுங்கள்

நினைவின் பதிவேட்டில் ஒரு புத்தகக்குறியாய்,
திருவனந்தபுரத்து வின்ஸ்டர் ஹாஸ்டலின் மழைப்பாசியும், அழுகிய சருகுகளும்
அய்யா நீங்க ஒருத்தராச்சும் எங்கள புரிஞ்சிகிட்டு இருக்கீங்க (உள்குத்துகள் இருந்தாலும்).
ரொம்ப நன்றிங்க அய்யா.

தமிழ்நாட்டுல வந்து தேர்தல்ல நில்லுங்க, உங்களை 2011 முதல்வர் ஆக்குகிறோம்.

உங்க அளவு கூட துணிச்சல் இல்லாதவனுங்க எல்லாம் அரசியல்ல இருக்கானுங்க.

என்னங்கடா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

நீங்கள் காட்டவில்லை என்றால் உலகம் பார்க்காதா? இல்லை விஷயம் வெளியில் வராதா?

என் இத்தனை கடுப்பிற்கு காரணம், இந்திய செய்திகளை பற்றி அறிய இருக்கும் முக்கிய ஆங்கில ஊடகங்கள், NDTV and CNN IBN. இந்த இரண்டு இணையதளங்களையும் மட்டுமே அடிக்கடி பார்த்து செய்திகளை உடனடுக்குடன் தெரிந்துகொண்டு இருக்கும் எனக்கு, இலங்கையில் இறந்த மக்கள் பற்றிய படமோ செய்தியோ ஒன்றும் வரவில்லை.

சரி ஒரு தேடுதல் செய்து தான் பார்ப்போம் என்று பார்த்தால், அதிலும் அப்படித்தான். ஒரு பேச்சுக்கு கூட அந்த தகவல் இல்லை.

இலங்கை

சரி என்று காஸா பற்றி தேடினால், அதிலும் அமெரிக்க பார்வைதான். ஆனாலும் சில படங்களும், இறந்த மக்கள் பற்றிய செய்திகளும் இருந்தன.

காசா

இறந்தவர்கள் எல்லோரும் மனிதர்கள் தானே?

ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ் என்றால் அவ்வளவு இளக்காரமா?

கரீனா கபூரின் ஜட்டி அளவை தளத்தில் போடும் நீங்கள், அப்படியே உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் அளவையும் போடலாம். உங்களுக்கு அது தானே முக்கிய செய்தி.


தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

கைமாறிய காதலி

5 நிமிட ரயில் தூரத்தில் இருந்தாலும் தினமும் பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் எப்படி இல்லையோ அதே போல் அடிக்கடி பார்க்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நானும் ஜெய்யும் அடிக்கடி பார்த்துக்கொள்வதில்லை.

இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். சிங்கப்பூர் வந்தும் கூட அடிக்கடி பார்த்துக்கொள்வதில்லை. எப்போதாவது பியர் அடிக்க ஒன்று கூடுவதுண்டு. கல்லூரியில், பசங்களுடன் நான் படத்திற்கு சென்றால், அதே ஷோவில் ஏதேனும் ஒரு கல்லூரி பெண்ணுடன் ஓரசீட்டில் உட்கார்ந்து இருப்பான். எல்லோருக்கும் இந்த மச்சம் வாய்ப்பதில்லை.

இந்த ஜெய் பயல் இன்று என்னை வரச்சொல்லி இருந்தான். இன்று தான் இந்தியா சென்று திரும்பி இருந்தான். கண்டிப்பாக விமான நிலையத்தில் இருந்து ட்யூட்டி ஃப்ரீ சரக்கு வாங்கி வந்திருப்பான். எனவே நாளை அலுவலகத்திற்கு மருத்துவ விடுப்புதான் போடப்போகிறேன்.

இவனுக்கு அரசல் புரசலாக சில தொடர்புகள் உண்டு. முன்பொரு நாள், அலுவலகத்தில் அவன் அருகில் இருந்த பெண் மருத்துவ விடுப்பில் இருந்த போது இவனை போனில் அழைத்து வீட்டிற்கு வரச்சொன்னாளாம். இவன் தகுந்த முன்னேற்பாடுகளுடன் அவள் வீட்டிற்கு செல்ல, அவள் வீட்டில் யாரும் இல்லையாம். வீடு திரும்ப மாலை ஆகிவிட்டது என்றான் ஒரு நாள் போதையில்.

இப்போது அலுவலகம் மாறிய பின் ஒரு இந்தியப்பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருக்கிறான். இந்த முறை இவள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது இவளை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிக்கொண்டிருக்கிறான். இந்த பெண் ஏற்கனவே ஒருவனுடன் திருமணம் செய்யாமல் இருந்து, சக்கையான பின் அவன் சாதுர்யமாக விலகிவிட்டான். அன்புக்கு ஏங்கிக்கொண்டிருந்த போது இவன் சிக்கியிருக்கிறான். இவனும் எப்படி மடங்கினானோ தெரியவில்லை. ஆனால் வசமாக சிக்கி இருக்கிறான். இதை சொல்லும்போது அவன் கையில் மீன், சில பூ படங்கள் நீல நிற பால்பாயிண்ட் பென்னால் வரையப்பட்டிருந்தன. அவை அந்த பெண்ணால் வரையப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன் பூ சற்று மென்மையாக இருந்தது

ஒருவேளை அந்த பெண் பற்றி வீட்டில் பேசியிருக்கலாம் ஏதாவது நடந்திருக்கலாம். ஹூம்ம்ம் இந்த 5 நிமிட பயணத்திற்குள் எத்தனை விஷயங்களை அசை போடுகின்றது மனது.

பாட்டிலை திறக்கும் முன் விஷயத்தை திறந்தான் ஜெய்.

“எனக்கு வீட்டில கல்யாண ஏற்பாடு பண்ணிருக்காங்க டா.”

“என்னடா சொல்ற, அப்ப அந்த கையில பூ படம் போட்ட பொண்ணு?” என்றேன் லேசான அதிர்ச்சியுடேன்.

”அதுதான்டா எனக்கும் கவலையா இருக்கு. கல்யாணம் பண்ணிகிட்டு வந்ததுக்கப்புறம், ஏதும் பிரச்சினை பண்ணக்கூடாது இல்ல”

“அடப்பாவி, அப்ப அவள கழட்டிவிடப்போறியா?“

“டேய் அப்படிலாம் சொல்லாதடா, அவ பாவம்டா. ஆனா அவளுக்கு யாராச்சும் கிடைச்சா பரவாயில்ல, அவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிற டைப் தான்”

“என்னடா சொல்ற? வீட்டில இந்த பொண்ண பத்தி பேசலையா?”

“இல்லடா, ஒரு நல்ல கவுண்டர் பொண்ணு ஃபோட்டோ கொடுத்தாங்க, வீட்டில செம வசதி. பொண்ணும் குத்துவிளக்கு மாதிரி இருக்கு”

“இந்த பொண்ணுக்காக நீ கவலைப்பட்டா, பேசாம இந்தியாவே போய்டு. அங்க உனக்கு 75,000 சம்பளம் கொடுக்க ரெடியா இருக்காங்களே”

“இல்லடா, இந்த பொண்ணு வீட்ல நான் சிங்கப்பூர்ங்கறதால தான் பொண்ணே கொடுக்கறாங்க”

“சுத்தம். இப்போ என்னடா பண்றது."

"அதுதான்டா எனக்கும் தெரியல. பேசாம் இந்த பொண்ண நீ பாத்துக்கறியா?”

“அட நாயே என்னடா சொல்ற?”

“இல்ல மச்சி, பொண்ணு நல்ல பொண்ணுடா, நல்லா செலவு பண்ணும், ரொம்ப ஃப்ரெண்ட்லி. சோசியல் டைப் புரியுதா” இந்த புரியுதா என்ற இடத்தில் சற்று அழுத்தம் அதிகம் காட்டினான் ஜெய்.

“போடா இவனே, இதெல்லாம் கேவலமா இல்லயா?”

“டேய் நீ ஏன்டா இவ்ளோ பொங்கறே? சும்மா ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிப்பார்”

“ஆள விடு சாமி. நானாவது நல்லாயிருக்கேன்”

“ஓகே ஒகே டென்சன் ஆகாதடா. வந்த வேலையைப்பார்ப்போம்”

2 நாட்கள் ஆகியிருக்கும். ஒரு இரவு போனில் அழைத்து, “நான் அவகிட்ட எல்லாம் சொல்லிட்டேன்” என்றான்

“என்னடா சொன்னா அவ?”

“கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா. அப்புறம் அவகிட்ட நான் வாங்கியிருந்த 500$ பணம் கேட்டா”

“எப்படியோ பிரச்சினை முடிஞ்சா சரி”

“ஆனாலும் அவ பாவம்டா. முடிஞ்சா அவளுக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பிபாருடா. அவ நம்பர் உன்கிட்ட இருக்கு தானே. இப்படிதான் நானும் எஸ் எம் எஸ் அனுப்பி பிடிச்சேன்”

“போடா வெண்ண. வேலையப்பாரு போய்”

பெண் நல்ல அழகாகத்தான் இருப்பாள். சரி ஒரே ஒரு எஸ் எம் எஸ் அனுப்பித்தான் பார்க்கலாமே என்று அனுப்பும்போது எனக்கு தெரியாது, அவள் அன்றிரவு தற்கொலை செய்துகொள்வாள் என்றும் அடுத்த நாள் காலையிலேயே போலீஸ் என்னை வந்து விசாரிக்கும் என்றும்
----o0o----Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.