மிஷ்கின் திடீரென்று வந்து தனக்கென தனியிடத்தை பிடித்து தனக்கென தனி பாணியையும் உருவாக்கிக்கொண்டுள்ளவர். இங்கு திடீரென்று என்று கூறப்படுவது முதல் படத்திலேயே கவனத்தை திசை திருப்பியவர் என்றதால்.

மிஷ்கினின் படங்களில்(இதுவரை இரண்டு தான்) சில விஷயங்களை நாம் எளிதில் கவனிக்கலாம். மிஷ்கினின் படங்களில் எதார்த்தம் என்பது மிகக்குறைவாக இருக்கும். நடிகர்களின் நடிப்பில் ஒரு புதுவிதமான் நாடகத்தனம் தெரியும். இருப்பினும் மக்களின் நாடி பிடித்து அதற்கேற்றார்போல் இவரது திரைக்கதை இருப்பது தான் இவரது வெற்றியின் ரகசியம்.

இவரது சித்திரம் பேசுவதடி வெளிவந்தபோது கானா உல‌கநாதன் புண்ணியத்தில் படம் மக்கள் மனதில் இடம் பிடித்தது. பாடலுக்காக படம் பார்க்கவந்தவர்களுக்கு படத்தில் இருந்த புத்துணர்ச்சியான சில விஷயங்கள் பிடித்துப்போயின. ரவுடிகள் பிண்ணனியில் நடக்கும் காதல்கதைகள் தமிழ் சினிமாவில் ஏராளம். கிட்டத்தட்ட எல்லா தெருக்களில் இருக்கும் பழைய போஸ்டர்களில் ஒன்று இந்த வகைக்கதையுடன் தான் இருக்கும். ஆனால் இதையும் மீறி அந்த படம் வெற்றிபெற்றதற்கு காரணம் படம் முழுக்க பார்வையாளர்களை வசப்படுத்தி வைத்திருந்ததுதான். படம் இறுதியை எட்டும்போது கொஞ்சம் தொய்வாய் இருந்ததென்னமோ உண்மைதான். படம் மிகவும் பாசிடிவாக இருந்தது மேட்டினி ஷோவில் படம் விட்டுச்செல்லும் மக்களுக்கு கூட தலைவலியின்றி செல்ல உதவியது.

அஞ்சாதேவிலும் கானா/குத்துப்பாடல்கள் இருந்தாலும் படம் பெயர்பெற சித்திரம்பேசுதடி படமே போதுமானதாக இருந்தது. இயக்குனர் இந்த படத்தை திரையுலகம் மீதுள்ள வெறுப்பினால் எடுத்ததாக கூறுகிறார். அவரது நந்தலாலா வந்திருக்கவேண்டிய நேரம் அது. அந்த படத்திற்கு சரியாக கிடைக்காத ஒத்துழைப்பினால் எப்படியாவது நன்றாக ஓடும் ஒரு வர்த்தகப்படம் எடுத்து தன் பெயரை நிலைநிறுத்திக்கொள்ளும் கட்டாயத்தில் எடுத்தபடம் இது. அதனாலேயே சில காட்சிகள் பகிடி போல் இருக்கும். அஞ்சாதே சற்று அனைத்து களங்களையும்(காதல், நட்பு, சென்டிமென்ட், ரவுடிகள், துப்பறிதல்) கலந்துகட்டி ஒரு சூப்பர் மசாலாவாக இருந்தது.

இந்த இரண்டு படங்களிலும் சில விஷயங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்ந்து வந்திருந்தன. அவற்றைப்பற்றி...


  • இரண்டிலும் கதாநாயகர்கள் வீட்டை மதிப்பதில்லை

  • இரண்டு படங்களிலும் தங்கைகள் முக்கிய கதாபாத்திரங்கள். அஞ்சாதேவில் நரேன் மற்றும் அஜ்மல் இருவருக்கும் தங்கைகள் உண்டு. இரண்டு படங்களிலும் தங்கைகள் முக்கிய கதாபாத்திரங்கள்

  • ஏதேனும் ஒரு கதாபாத்திரம் எப்போதும் குடியிலேயே இருக்கும். சித்திரம் பேசுதடியில் நண்பன், அஞ்சாதேயில் பாதிபடம் டாஸ்மாக் தான்

  • சண்டைக்காட்சிகள் ஒருவன் ஒருவனுடன் மோதுவதாக இருக்கும். கூட்டமாக வில்லன் ஆட்கள் வந்தாலும் கதாநாயகனுடன் ஒருவர்தான் மோதுவான். அதுவும் சண்டை வித்தியாசமாக இருக்கும். கதாநாயகனுக்கு ஏதோ வெயில் தலைக்கு ஏறியது போல் இருக்கும் சண்டைகள்

  • 'அய்யோ' என்ற வசனம் இரண்டு படத்தின் கிளைமாக்ஸிலும் உண்டு. சித்திரம்பேசுதடியில் கதாநாயகன் 'அய்யோ சாரு' என்பான். அஞ்சாதேயில் விஜயலட்சுமி, 'அய்யோ அண்ணா' என்பாள். இது எதேச்சையாக நடக்கும் விஷயமாக தெரியவில்லை. சித்திரம்பேசுதடியில் இந்த வசனம் மிகப்பிரசித்தம்.

  • ரவுடிகளின் பின்புலம் வித்தியாசமான இடங்கள். சித்திரம்பேசுதடியில் வாழைமண்டி. அஞ்சாதேயில் ஒரு மெக்கானிக் ஷெட் மற்றும் ஐஸ் ஃபேக்டரி

  • இரண்டு படங்களிலும் மெல்லிய அதிர்ச்சி படத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்.

கிரிவலம்

ஒவ்வொரு பௌர்ணமியும் திருவண்ணாமலைக்கு புதுசாயம் பூசுகின்றது. சாயங்கள் அனைத்தும் அவசர அவசரமாக அழிபட்டு அடுத்தநாளில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றது ஊர். ஆனாலும் கிரிவலப்பாதை எங்கும் குப்பையையும் கற்பூர மணத்தையும் அப்படியே விட்டுவிட்டு.

திருவண்ணாமலையில் இருப்போருக்கு கிரிவலநாள் ஒரு அரசியல் ஊர்வலம் நடக்கும் நாள் போல, அவ்வளவு இடையூறுகள். ஆனால் மக்கள் அழகாக புதிய வழிகளை பின்பற்றி தங்கள் கூடுகளுக்கு திரும்புவர்.

இத்தனை திருவண்ணாமலை அனுபவங்களும் நான் அங்கு கல்லூரியில் படித்த காலத்தில் கிடைத்தன. கல்லூரி காலத்தில் நாங்கள் கிரிவலம் செல்கிறோம் என்றால் அந்த தினத்தன்று எங்கள் கல்லூரியின் பேர் பெற்ற ஃபிகர் ஏதாவது கிரிவலம் செல்வதைக்கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் பல ஆண்டுகள் கழித்து இன்று செல்வது என் அலுவலக நண்பருக்காக. நண்பன் என்று சொல்லாமல் நண்பர் என்று சொல்லுவதிலேயே தெரிந்திருக்கும் அவர் ஒரு அலுவலக நண்பர் என்று. அதுவும் மேல் அதிகாரி வேறு. அவரும் நானும் பலமுறை யோசித்து இறுதியில் இன்று செயல்படுத்தி வந்துவிட்டோம்.

பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்ததால் எப்படியோ கஷ்டப்பட்டு கோவில் வாசல் அருகே வந்தோம். அங்கு மிகப்பெரிய அளவில் கற்பூரங்கள் எரிந்து சூழ்நிலையை மாற்றிக்கொண்டிருந்தது. கோவிலுக்கும் சின்னதேர் இருக்கும் இடத்திற்கும் நடுவில் இருந்த மூத்திரசந்துகூட கற்பூரமணம் கமழ்ந்தது.

கிரிவலம் மக்களுக்கு ஆன்மீகத்தை விட வயிற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்பது வழியெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் இருந்தே கண்டுகொள்ளலாம். வீடுகள் கூட அந்த ஒரு நாளுக்காக ஏதோ ஒரு விதத்தில் கடையாக மாறிக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு வியாபாரி, தனக்கேற்ற வாடிக்கையாளனுக்கோ அல்லது சந்தர்ப்பத்திற்கோ காத்திருக்கிறான். எங்களை மட்டும் விட்டுவிடுமா இந்த இட்லிக்கடைகள்? நன்றாக சாப்பிட்டபின் நடக்கத் துவங்கினோம்.

எத்தனை விதமான மனிதர்கள், கிட்டத்தட்ட சென்னை தியாகராயநகரில் விழாக்காலத்தில் இருப்பதைப்போல, பாதிபேருக்கு மேல் கண்டிப்பாக பக்தியுடன் செல்லவில்லை என்று என்னால் எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்லமுடியும். சமூகம் நம்மில் இருந்தே தொடங்குகின்றது அல்லவா!

இப்போதெல்லாம் பலர் செருப்பு போட்டு சுற்ற ஆரம்பித்துள்ளனர். முன்பெல்லாம் வெறும் காலில் இரவில் சுற்றுவோம். ஆனால் திருவண்ணாமலையின் வெயில் பகலெல்லாம் தார்ரோடால் சேமித்துவைக்கப்பட்டு இரவில் வெளிவரும். நம் கால்களை கொப்புளம் போட. ஆனால் அடுத்தநாள் நன்றாக இருப்பதாகவே தோன்றும். என் கல்லூரி நண்பன் ஒருவனுக்கு காலில் ஆணி இருந்ததால் அடிக்கடி உட்கார்ந்துவிடுவான். தோளில் கைவைத்து வருவான். இப்போது அதைப்போன்ற மக்களைப்பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு என்ன வலியோ என்றுதான் எண்ணம் செல்கின்றது

திடீரென்று கடந்து செல்லும் பக்தர்குழுக்களின் உரத்த பாடல்கள், சைக்கிளில் செல்லும்போது லாரிக்காரன் ரோட்டோரமாய் அணைத்து செல்வதைப்போல் திடீரென்று நினைவு, பேச்சு அனைத்தையும் கலைத்து வேகமாய் செல்கின்றன. இந்த பாடலை அவர்கள் மனதார‌ப்பாடுகிறார்களா அல்லது அனிச்சையாய் பாடுகின்றார்களா என்பது புதிராக உள்ளது. அப்படி மனமின்றி பாடிச்செல்பவனில் ஒருவனாவது வீட்டில் தனியாய் விட்டுவந்த மனைவி மீது சந்தேகத்துடன் இருப்பான் தானே?

இப்படி எல்லாம் தான் நான் நினைத்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன். என் நண்பராவது நல்ல எண்ணத்துடன் வருவார் என்று நினைக்கிறேன். அவர் மீது அலுவலகத்தில் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை உண்டு. மனிதர் எப்போது எரிந்து விழுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று படு சாந்தமாக இருக்கிறார். யார் யாருக்கு என்ன என்ன கவலைகளோ?

அடிஅண்ணாமலை வந்தால் எப்பேறுபெற்றவனுக்கும் களைப்பு வரும். எங்களுக்கு தாகமும் சேர்ந்து வந்தது. இளநீர் குடிக்கச்சென்றொம். எல்லாவற்றையும் பற்றி கருத்து இருக்கவேண்டுமா என்ன? இளநீர் விஷயத்தில் தாகம் மட்டும்தான் இருக்கிறது.

இளநீர்க்காரன் மிக பிசியாக இருந்தான். அவனிடம் இருந்து வாங்குவதற்குள் நுரை தள்ளிவிடும்போல. கடைசியாக அவன் வாங்கிய விலையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலைக்கு வாங்கினோம். என் நண்பர் விலையை பேரம் பேச முயல அது அவனுக்குள் இருந்த முதலாளித்துவத்தை எழுப்பியது. கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்ததும், அலுவலகத்தில் அனைவரையும் போட்டு வாங்கும் நண்பர் முகம் சிவக்க கைநடுங்க அவனிடம் பேசிக்கொண்டிருந்தது என்னவோ போல் இருந்தது. ஒருவேளை நான் அங்கு இல்லாமல் இருந்து இருக்கலாம் என்று நண்பர் எண்ணுபவர் போல் காணப்பட்டார். நண்பரின் பேரத்திற்கு அவன் படிந்துவராததை ஸ்ட்ராவில் என் இளநீரின் சுவையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

"நீயே வச்சிக்கோ உன் இளனீய, தோப்பு விலை சொல்ற" என்றார் நண்பர் இறுதியாக‌.

"அருவா கழுத்தில் எற‌ங்கிடும். ஒழுங்கா வாங்கிட்டு போய்டு. வெட்டிவச்சிருக்க என்னை என்ன கேணப்**** நெனச்சியா? உன்கூட வந்த மனுஷன் அமைதியா குடிக்கல? உனக்கு மட்டும் என்ன ஒரு முழமா இருக்கு?" என்று இளநீர்க்காரன் அமைதியாக சொல்ல,

நண்பர், "சரி கொடு. அண்ணாமலையாருக்கு போட்டதா நெனச்சிக்கறேன்" என்றார்.

இளநீர் கொடுத்தான் என்பதை விட போட்டான் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு என் நண்பர் வாழ்நாளில் கேவலப்பட்டதே இல்லை என்பதுபோல் முகம் இருந்தது. இளநீர் விற்பவர் என்று சொல்ல மனமின்றி விற்பவன் என்று சொல்கிறேன். யார் சொல்லிக்கொடுத்தது இது?

இளநீர் குடுத்ததும் உள்ளே இருக்கும் வழுக்கைத்தேங்காயை எடுத்துக்கொடுக்க அவனிடம் இருவரும் சென்றோம். என் நண்பனைப்பார்த்ததும் என்ன நினைத்தானோ தெரியவில்லை, "அதெல்லாம் வெட்டித்தரமுடியாது இருக்கற கும்பல பார்த்த இல்ல, வேணும்னா பையில போட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் வெட்டித்துண்ணு" என்றான். நானும் இதற்காய் காத்திருந்தது போல, "வாங்க சார் போகலாம், இந்த இளனீல வழுக்கையே இருக்காது. நாமதான் அவசரப்பட்டு அவன்கிட்ட கேட்டுட்டோம்" என்றேன்.

நண்பருக்கு இதைவிட ஒரு நல்ல கிரிவலம் அமைந்திருக்காது என்று நினைத்திருக்கையில் 2 போலீஸ்காரர்கள் வந்தனர். இதுவரை முதலாளிபோல் இருந்த இளநீர்க்காரன் சற்று மிரள ஆரம்பித்தான்.

நடக்க ஆரம்பித்த என்னை நண்பர் நிறுத்தினார். கொஞ்சம் இருங்க ரெஸ்ட் எடுத்துவிட்டு போகலாம் என்றார்.

எதற்காக அந்த போலீஸ்காரர் அந்த இளநீர்க்காரனை அறைந்தார் என்பது கேட்கும் தொலைவில் நாங்கள் நிற்கவில்லை. ஆனால் அறை பொளேரென்று விழுந்தது மட்டும் கேட்டது. அவன் கைகட்டி குனிந்து நின்றான். அவனது பக்கத்தில் ஒரு சின்னபையனும் அதே நிலையில் கை கட்டி நின்றிருந்தான். சற்று முன் பிரம்மாண்டநாயகனாய் இருந்த இளநீர்க்காரன் திடீரென்று பாதாளத்தில் நின்றிருந்தான். என் நண்பரை மிரட்டியது மட்டும் இளநீர்க்காரன் பிரம்மாண்ட நாயகனாய்த்தெரிய காரணம் இல்லை என்று நம்பிக்கொண்டிருந்தேன்.

ஒரு பலத்தின் முன்பு அடிமையாய் கூனிக்குறுகி நின்றுகொண்டிருந்தான். முதலாளித்துவம் என்று சொன்னதை எல்லாம் திரும்பபெறுகிறேன். பலத்தின் முன் அனைவரும் சப்பைதான். அவனது அவமானத்தை ஏதோ ஒரு விதத்தில் என்னாலும் உணர முடிந்தது.

அலுவலகத்தில் மேல் உள்ளோரிடம் படும் அவமானத்திற்கு இது சற்றும் குறைந்ததல்ல. வலியோரிடம் படும் அவமானம் மட்டும் எப்பொதும் உரைப்பதே இல்லை. ஆனால் மனதில் எங்கோ சென்று மறைந்துகொள்கின்றது, மீண்டு எழ துணிச்சலின்றி அப்படியே வடு மேல் வடுவாய் படிந்து விடுகின்றது. சமயத்தில் வடுவின் வலி அதிகரிக்கும்போது, குடும்பத்திலோ இல்லை நமக்கு கீழ் உள்ளோர் மேலோ ஆயுதமாய் செலுத்தப்படுகின்றது. தற்கால வருணாசிரமம் மிகவும் கொடியதாய் உள்ளது. மனதையும் புதுவிதமாய் காயப்படுத்துகின்றது.

எல்லாம் முடிந்தபின் நண்பர் சொன்னார், "அப்போவே சொன்னேன் இல்ல, அண்ணாமலையான் பார்த்துப்பான்னு".

எங்கிருந்தோ ஓடிவந்துகொண்டிருந்த கூட்டம் "அண்ணாமலையானுக்கு அரோகரா" என்று கத்திக்கொண்டே சென்றுகொண்டிருந்தது. இங்கு இருந்த மக்கள் கூட்டம் பக்கத்தில் இருந்த சோளக்கடைக்கு மாறிச்சென்று அங்கு கொறிக்கத்தொடங்கியது.

காசியில் கங்கையில் குளித்து அனைத்துப் பாவங்களையும் நீக்கிக்கொண்டு கரை ஏறும்போது, ஓரமாக முழு ஈரமாக நின்றிருந்தாள் ஒரு அழகிய பெண்

என்னைப்பார்த்துக்கொண்டே டைப்படித்த அமுதா என் டைப்ரைட்டருக்கருகே விட்டுச்சென்ற தாளில், ASDFGF;LKJHJ

தனியாய் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது துணையாரும் இல்லையே என்று வருத்தப்பட்ட கணத்தில், தட்டில் இருந்து மறைந்தது ஒரு இட்லி

இப்படி இரவெல்லாம் தூங்கவிடாமல் மேலே படுத்தால் என்ன செய்வது? படுத்தாலும் பரவாயில்லை, கடிக்காமல் இரு என் அருமை மூட்டைபூச்சியே

i pressd lift button to top most floor.instead of going up,it went down as if cable is cut.நாயே மெத்தையில தூங்கி கீழ விழுறதே பிழைப்பா போச்சு

கோவிலில் புளியோதரை சாப்பிட்டுக்கொண்டே மனைவி கணவனிடம் "புளியோதரை சூப்பரா இருக்கில்ல". கணவன்,"நீ சமைக்கிற லட்சணம் அப்படி"

I met a nice tamil girl in gray chudi in my new office yesterday. She was seeing me very often. I too responded. Until i see her metti

The last man on earth was tweeting alone, suddenly somebody started follwing :-)

நீண்ட காலத்திற்கு முன் சொன்னது போல, இந்த வலைத்தளத்தை லேசாக பெயர்த்து சொந்த தளத்தில் வேர்ட்பிரஸில் நிறுவி உள்ளேன்.

இன்னும் ஆரம்பகட்ட பிளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் புது இட குழப்பங்கள் தீரவில்லை. எனவே சில பல குழப்பங்கள் சில நாட்கள் புதிய வலைத்தளத்தில் இருக்கலாம். கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள்.

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க விரும்பாததாலும், திடீரென்று ரிசெஷனில் புதிய வலைத்தளத்தை நிர்வகிக்க முடியாமல் போனால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கையினாலும், இனி வரும் பதிவுகள் இரண்டு வலைத்தளத்திலும் வரும்.

ஆனால் தமிழ்மணத்தில் ஏதேனும் ஒன்றைத்தான் காட்ட எண்ணம்.

நீ என்னடா பெரிய ஆள்? இவ்ளோ பில்ட் அப் கொடுக்கறே என்று சொல்லும் நண்பர்களுக்கு,

என்னையும் மதிச்சு கொஞ்சம்பேரு ஆர்.எஸ்.எஸ் ஃபீட் மூலமா பின் தொடர்கிறார்கள். அவர்களுக்கு சென்று சேரத்தான் இந்த செய்தி :)

http://kishoresays.com/blog/

குறும்படம் என்பது தமிழில் சோகமயமாகவோ அல்லது மெதுவான நகர்வுகளோடும் இருக்கவேண்டும் என்பது போன்ற சில விதிகளுடனே பெரும்பாலும் காணப்படும். அதை தகர்த்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் சொல்ல வந்த விஷயத்தை நச்சென்று சொல்லி முடிக்கின்றது தாயம். அதில் சில சமூக செய்திகளும் இருப்பது ஒரு ப்ளஸ்.

தாயம் என்ற இந்த குறும்படத்தின் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி.

அருண் பலமுறை எழுதியும் தேறமுடியாத ஒரு சப்ஜெக்ட்டை பேப்பர் சேசிங் மூலம் முறியடிக்க ஐடியா கொடுக்கிறான் நண்பன் சந்தோஷ். சந்தோஷுக்கு தெரிந்த பல்கலைக்கழக ஆளிடம் பணத்தை கொடுத்தபின் தான் தெரிகின்றது சந்தோஷ் ஒரு கஞ்சா பார்ட்டி என்று. சந்தோஷும் அருண் நினைத்தபடியே ஒரு ஏமாற்று வேலைதான் செய்கிறான். ஆனால் அது இறுதி வரை அருணிற்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறான். இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதே கதை.

அமோரஸ் பெர்ராஸ்(தமிழில் ஆயுத எழுத்து) போல் இருவரின் கண்ணோட்டத்திலும் படம் பயணிக்கின்றது. முதல்பாதி அருணின் கண்ணோட்டத்தில் அவன் தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டிருப்பது வரை நீள்கின்றது.

அடுத்தபாதி சந்தோஷின் கண்ணோட்டத்தில் செல்கின்றது. இவனும் எல்லா பித்தலாட்டத்தையும் செய்து அருணின் தேர்வுமுடிவிற்காக காத்திருக்கும்போது அருண் மற்றும் சந்தோஷின் கண்ணோட்டங்கள் இணைந்து முடிவு வருகின்றது.

Part-1

Part-2


இந்த ஒரு குட்டிப்படத்தில், வாய்ப்பு(Probability) பற்றி இணைத்திருப்பது அருமை. அதேபோல் ஒரு சின்ன சமூக கருத்தையும் சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது.

இயக்குனர் ரஹ்மானின் இசைப்பிரியராக இருப்பதால் அடா மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் பாடல்கள் மற்றும் இசை சரியான இடத்தில் பயன்படுத்தியுள்ளார்.

உச்சகட்ட காட்சியில் இசையும் காட்சியும் இணைந்து விருந்தளிக்கின்றன.

இயக்குனருக்கு முதல் முயற்சி இது என்று சொன்னால் கூட நம்ப முடியவில்லை. பாராட்டப்பட வேண்டிய ஒரு முதல்முயற்சி.

இவ்வளவு சொல்லிவிட்டு படத்தில் உள்ள குறைகளை சொல்லாமல் விடுவது சரி அல்ல. :)

படத்தின் நீளம் சற்று அதிகம். ஒரு குறும்படத்தை இவ்வளவு நேரம் தாக்குபிடித்து பார்க்கவைப்பது சற்று கஷ்டமான வேலை. ஆனால் அதில் வெற்றி கிடைத்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன்.

வசனம், படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள், பார்வையாளர்களுக்கு சில விஷயங்களை கற்றுக்கொடுப்பதுபோல் சில வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அருணின் கண்ணோட்டம் இன்னும் சரியாக காட்டப்படாதது. கதையின் இரண்டாம் பாகத்தில் இருந்த அழுத்தம் முதல் பாதியில் இல்லை.

இந்த படத்தை UNCUT ஆக பார்த்தவன் என்பதால் இந்த படத்தின் எடிட்டிங் மற்றும் நேர மேலாண்மை அட்டகாசம்.

அருமையான எடிட்டிங் இந்த படத்தை தொழில்நுட்ப ரீதியில் பேசவைக்கின்றது.

வசனம் பல இடங்களில் படம் பார்க்கிறோம் என்ற உணர்வின்றி இயல்பாக இருக்கின்றது

இந்த படத்தை பார்க்கும்போது தென்படும் சில புத்திசாலித்தனமான திரைக்கதை சமாச்சாரங்களை நான் கூறினால் பார்க்கும்போது உங்கள் ஆவலை குறைத்துவிடும் என்பதால், அதை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

படம் பார்த்தபின் சந்தோஷ்/அருண் யாருக்கு உண்மையில் வெற்றி என்பதை சற்று யோசித்துப்பாருங்கள், உங்களை அதன் விடை ஆச்சர்யப்படுத்தும்

மன்னார்குடி டேஸ்

மன்னார்குடி ஒரு நகரத்திற்கு சற்றும் குறைவின்றி எல்லா வசதிகளுடன், கிராமிய மணத்துடன் இருக்கும் ஒரு திருவாரூர் மாவட்ட ஊர். என்னதான் திருவாரூர் என்று சொல்லிக்கொண்டாலும் மக்கள் மனதில் இன்னும் தஞ்சாவூர்தான் விருப்பமான ஊர்.

அதிகாலையில் எழுந்துவிடும் ஊர். இன்னமும் மாட்டுவண்டிகளின் ஆதிக்கம் ரோட்டில் அதிகம் இருக்கும். அதுவும் கொம்பில்லாத ஒருவகை மாடுகள் இங்கு வண்டி இழுக்க அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

சாதிகளுக்கு தனியே வீதிகளும், விரால் மீன் விருப்பும், சட்டென சீறும் கோபமும், இன்னமும் சாணி மணம் கமழும் மண்ணும், அதிமுக பினாமிகளும், பந்தலடியும், தேரடியும், ஃபின்ட்லே மற்றும் நேஷனல் பள்ளிகளும், SGS கேபிளும் மன்னைக்கு உரித்தானவை.

மன்னை கிட்டத்தட்ட முக்கிய ஊர்களுக்கு நடுவில் இருக்கின்றது. இங்கிருந்து முக்கிய ஊர்கள் கிட்டத்தட்ட 30 முதல் 40 கிமீகளுக்குள் இருக்கின்றன என்றும் சொல்லலாம். தஞ்சை, நாகை, திருவாரூர், குடந்தை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்கள் அருகில் உள்ளன.

இந்த ஊரில் நான் பிறந்ததையும், விடுமுறைகளுக்கு சென்று வந்ததையும் தவிர எந்த ஒரு பெரிய சம்பந்தமும் எனக்கும் இந்த ஊருக்கும் இல்லை. எனவே என்னால் முடிந்த/தெரிந்த‌ வரை மன்னார்குடி பற்றி எழுதப்போகிறேன்.

தவறுகள் திருத்தப்படுவதற்கே, திருத்துங்கள்.

காங்கிரஸ் அரசு ஸ்திரமான ஆட்சிமையத்தை கொண்டிருக்கவில்லை. மன்மோகன்சிங் பிரதமராக முன்னிருத்தப்பட்டாலும், சோனியா குடும்பமே ஆட்சி செய்தது. (சீனா ஒலிம்பிக் போட்டியின் போது சோனியாவிற்கு அழைப்பு அனுப்பியது ஆனால் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பவில்லை)

அமெரிக்காவின் கூலியாக செயல்பட்டது. இந்தியாவின் தொலைநோக்கு திட்டங்களுக்கு இது உதவுவதாக அவர்கள் கூறிக்கொண்டாலும், உலகநாடுகள் மத்தியில் இது ஒரு தலைகுனிவே.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் சாதனை என்று எந்த ஒரு விஷயத்தையும் நம்மால் எளிதில் நினைவுகூறமுடியாது. இப்படி இருந்தது ஆட்சி.

இலங்கை விஷயத்தில் தமிழர்களை மீண்டும் ஒருமுறை திட்டமிட்டு ஏமாற்றியது. பல்லாயிரம் தமிழர்கள் உயிரை இலங்கை ராணுவம் அழிக்க, இந்தியா மறைமுகமாக நேரடி உதவி அளித்தது.

இலங்கையில் நடந்த இனவொழிப்பை கண்டிக்ககூட இல்லை. காஸாவில் நடந்த யுத்தத்தை கண்டித்த காங்கிரஸ் அரசுக்கு இலங்கை கண்ணில் தெரியவே இல்லை. ஒரு குருட்டு அரசாங்கம் நடத்தப்பட்டது.

திமுக தமிழினத்தலைவரை ஒவ்வொரு முறையும் தங்கள் தலைவராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் கட்சியாக இருந்துகொண்டு இலங்கை விவகாரத்தை கண்டிக்க பிரதமருக்கு கடிதம் எழுதி, தங்கள் பங்கிற்கு தமிழர்களை ஏமாற்றினர்.

திமுக ஒரு குடும்பகட்சியாக மாறி வருவதால், அவர்களை தேர்ந்தெடுத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த அளவில் நன்மைகள் கிடைக்கும் என்பது கேள்விக்குறி.

திமுகவால் ஒரு திறமையான ஆட்சியை தமிழகத்தில் கொடுக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் காவல்துறை சம்பவத்தில் மிக மோசமான அணுகுமுறையை கையாண்டது.

எதிர்கட்சிகளில் இருந்து வருபவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் தாராளமான கட்சியாக திமுக இருந்தாலும், கொள்கை அடிப்படை ஏதும் இன்றி வருவோரை எல்லாம் சேர்த்துக்கொள்வதால் கட்சி மீதான நம்பிக்கை குறைந்திருக்கிறது.

தமிழர்களின் உயிர்களை மிக துச்சமாக மதிக்கும் இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழர்களின் நலன் பாதிக்கப்படும்.

சுருக்கமாக சொன்னால், தமிழர்களுக்கெதிரான கூட்டணி இது.Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.