தமிழில் உள்ள வழக்கொழிந்த சொற்களை எழுதச்சொன்னார் ஜோதிபாரதி. நண்பரின் விருப்பத்திற்கிணங்க அதை சற்று அலசலாம் என்று எண்ணுகின்றேன்.

எனது 24 வருடங்களுக்குள் வழக்கொழிந்துபோன வார்த்தைகளை தேடுவதென்பது சற்று கடினம்தான். ஏனென்றால் என்னை அறியாமல் நானும் அந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டிருப்பேன்.

நான் பிறந்தது மட்டும் தஞ்சை மாவட்டம், வளர்ந்தது கடலூர் மாவட்டம். அடிக்கடி தஞ்சையும் சென்று வருவதால் இயல்பிலேயே எனக்கு சில குழப்பங்கள் உண்டு. சிறு வயதுவரை ஆத்தா என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த நான் கடலூரின் ஆதிக்கத்தால், ஆயா என்று கூப்பிட ஆரம்பித்தேன். இதில் என் ஆத்தாவுக்கு வருத்தம்தான்.

அதேபோல் மன்னார்குடியில் வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டிருந்த நான் கடலூர் வந்து மல்லாட்டை சாப்பிடும்படி ஆனது. மல்லாட்டை என்பது மணிலாக்கொட்டையில் இருந்து வந்தது என்பது பலருக்கு தெரிந்திருக்கும். தமிழின் தேய்வு குழந்தையில் இருந்தே தொடங்குகின்றது. எப்போது அம்மா அப்பாவுக்கு பதிலாக மம்மி டாடி வருகின்றதே, அப்போதே குழந்தைகளுக்கு தமிழ் மீதுள்ள ஆர்வம் குறைய ஆரம்பிக்கின்றது. இந்த சமயத்தில் நான் குழந்தையாக இருந்தபோது பக்கத்து வீட்டில் இருந்த ஆங்கிலோஇண்டியன் குடும்பத்தில் இருந்த சின்ன பையனை கன்னாபின்னாவென்று கண்டிக்கிறேன். அந்தப்பயலால் தான் நான் மம்மி டாடி என்று கூப்பிடுகின்றேன்.

அதேபோல் வீட்டுக்குள்ற இருந்து மன்னிக்கவும் மீண்டும் கடலூர் தலைகாட்டுகின்றது. வீட்டுக்குள் இருந்துதான் தமிழ் வாழவும் வளரவும் முடியும், தெருவோரக்கூட்டங்களிலோ அல்லது திரைப்படப்பெயர்களிலோ அல்ல.

விளையாட்டினால் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. உதாரணமாக, பந்து என்ற வார்த்தை கிட்டத்தட்ட மறைந்து அதை ’bபால்’ முற்றிலுமாக ஈடுகட்டிக்கொண்டிருக்கின்றது. எனக்கு தெரிந்து நாய்த்தோல்பந்து என்று டென்னிஸ் பந்தை அழைத்திருக்கின்றேன்.

பள்ளியில் மணியடிக்கப்போகுதுடா ஓடுடா, என்ற என் பள்ளியில் நான் கூறிக்கொண்டிருந்த இடத்தில் இப்போது மணிக்கு பதில் பெல்.

காலைசாப்பாடு, மதியசாப்பாடு, இரவுசாப்பாட்டை எல்லாம் ஆங்கிலம் உண்டு செரித்து பல காலமாகிவிட்டன‌.

அசதி என்ற வார்த்தை ஓய்வெடுக்கப்போய் அங்கும் ஆங்கிலம் டய‌ர்டாகாமல் இருக்கின்றது.

இப்படி எனக்கு தெரிந்த அளவில் தமிழில் வார்த்தைகள் அங்கங்கு வழக்கொழிந்துகொண்டு செல்கின்றது.

ஒரு முழு வாக்கியத்தை பிறமொழிக்கலப்பின்றி எழுதவே இங்கு பலருக்கு இயலவில்லை என்ற விஷயம், டால்மியாபுரத்தில் ரயிலில் தலைவைத்ததன் நோக்கம் இன்று எந்த அளவில் நிறைவேறி இருக்கின்றது என்பதை தெளிவாகக்காட்டுகின்றது.

வேளாங்கன்னியில் பழைய மாதாகோவிலுக்கு செல்லும் வழியில் ஒரு கடையில், கு
ம்பி, பனிக்குழைவு என்றெல்லாம் எழுதி இருந்தது அவ்வளவு இனிதாக இருக்கும்.

தமிழை நாம் வளர்ப்பதை விட, நாம் தமிழில் வளர்வதைப்பற்றி சிந்திப்பதுதான் நம்மால் இயன்ற காரியம்.

முதலில் குழந்தைகளை தயவு செய்து தமிழ்வழிக்கல்வியில் சேர்த்து விடுங்கள்.

தமிழ்வழியில் படித்தால் ஆங்கிலம் வராது என்பதெல்லாம் சுத்தமுட்டாள்தனமான பேச்சு. அதை நம்பாதீர்கள். தமிழ்வழியில் படித்தால்தான் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். புரிந்து படிக்கும்போது, இப்போதும் பள்ளியில் படித்த பரப்பு இழுவிசை, கல்லூரியில் படித்த Surface Tension-விட நன்கு புரிந்துள்ளது தெரிகின்றது.

என் அம்மா, எப்போதும் புத்தகம் படிப்பார், சாப்பிடும்போதுகூட, அவரிடம் இருந்து பற்றிக்கொண்ட இந்த படிக்கும் வழக்கம், என்னை 6வது படிப்பதற்குள் ஆனந்த விகடன் முதலிய புத்தகங்களை வாசிக்க வைத்தது. எனவே நல்ல தமிழ் புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

நீங்கள் படிக்கக்கூட வேண்டாம், சும்மா வைத்திருங்கள் படிப்பது போல், அது குழந்தைகளை பெரிதும் படிக்கும் பழக்கத்திற்கு ஊக்குவிக்கும்.

நிறைய படியுங்கள், முடிந்தவரை தமிழில் பேசுங்கள்.

15 Comments:

  1. நட்புடன் ஜமால் said...
    \\ஒரு முழு வாக்கியத்தை பிறமொழிக்கலப்பின்றி எழுதவே இங்கு பலருக்கு இயலவில்லை என்ற விஷயம்\\

    சரிதான்.
    Kishore said...
    என்னப்பா இது? இவ்வளவு வேகமாய் பின்னூட்டம்?
    கலக்கறீங்கோ
    அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    பதிவு அருமை!
    வாழ்த்துகள்!!
    எழுத்து நடையும் நன்றாக இருக்கிறது!!
    அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    வெள்ளைக்காரனை அனுப்பி விட்டுட்டு நம்மவர்கள் செய்யும் ஆங்கில ஆதிக்கத்தை சுட்டுகிற பதிவு!
    யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    //காலைசாப்பாடு, மதியசாப்பாடு, இரவுசாப்பாட்டை எல்லாம் ஆங்கிலம் உண்டு செரித்து பல காலமாகிவிட்டன‌.

    அசதி என்ற வார்த்தை ஓய்வெடுக்கப்போய் அங்கும் ஆங்கிலம் டய‌ர்டாகாமல் இருக்கின்றது.//

    சிரிக்க; ரசிக்க; சிந்திக்க வைத்த எழுத்து நடை...
    தமிழ்க் காவலர்கள் வீடுகளிலேயே தமிழ் இல்லையாம்...கலைஞர் பேரன் மனைவிக்கு
    தமிழ் தெரியாதாமே...அவர் ஒரு ஆங்கிலப் பத்திரிகை நடத்துகிறாராமே!!
    அவர்கள் ஆங்கிலம்;இந்தி படித்து மந்திரியாக..மக்கள்..மந்தியாகவே இருக்க வேண்டுமா?
    தேர்தலில் வாக்கைப் போட்டுவிட்டு...
    முத்தமிழ் அறிஞரின்...மானாட மயி(ரா)லாட..;தமிழை வளர்க்குமென நம்புகிறாரா??
    கலைஞருக்கே தான் இளமையில் ஆங்கிலவழிக் கல்வி படிக்கவில்லை எனும் கவலை மனதில்
    இருந்தால் ஆச்சரியமில்லை.
    இந்த தமிழ் உயிர் மூச்சு என்பதெல்லாம் வெறும் பம்மாத்து..
    குடந்தை அன்புமணி said...
    எனது வலையிலும் வழக்கொழிந்த சொற்கள் பதிவு. தங்கள் வருகைக்கு காத்திருக்கிறது. முகவரி- namadukural.blogspot.com
    குடந்தை அன்புமணி said...
    // மன்னார்குடியில் வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டிருந்த நான் கடலூர் வந்து மல்லாட்டை சாப்பிடும்படி ஆனது.//

    நிலக்கடலை என்றும் சொல்வார்கள்.
    சி தயாளன் said...
    ம்.உங்களுக்கு உங்கள் மொழி வழக்கே இடம் மாறியதால் பாதிக்கப் பட்டு விட்டது...:-)
    கிஷோர் said...
    ஊக்கத்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிபாரதி அண்ணே
    சி தயாளன் said...
    வாசிப்பு பழக்கம் கொஞ்சம் தமிழ் சொற்களை வளர்க்க உதவும்..
    கிஷோர் said...
    வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ்.

    //இந்த தமிழ் உயிர் மூச்சு என்பதெல்லாம் வெறும் பம்மாத்து..//

    எல்லாம் அரசியல் செய்யத்தான்.
    கிஷோர் said...
    வருகைக்கு நன்றி அன்புமணி,
    கட்டாயம் உங்கள் பக்கத்திற்கு வருகின்றேன்.

    //நிலக்கடலை என்றும் சொல்வார்கள்.//

    ஆமாம் ஆமாம்
    :)
    கிஷோர் said...
    நன்றி டொன்லீ

    //வாசிப்பு பழக்கம் கொஞ்சம் தமிழ் சொற்களை வளர்க்க உதவும்..//

    கண்டிப்பாக‌
    யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    வேர்க்கடலை- மனிலாக் கொட்டை என்பதை ஈழத்தில் பரவலாகக் கச்சான் எனவே குறிப்பிடுவோம்.
    கிஷோர் said...
    // வேர்க்கடலை- மனிலாக் கொட்டை என்பதை ஈழத்தில் பரவலாகக் கச்சான் எனவே குறிப்பிடுவோம்.
    //

    அப்போ கடலை போடுவது என்று பாவிக்கும் வழக்கம் இல்லையா? :)

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.