ஒருமுறை கல்லூரியில் ஒரு எழுத்தாள லெக்சரர், அனைவரிடமும் சும்மா ஏதாவது கேட்டுக்கொண்டு வர, எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும் என்று சொல்லியிராவிட்டால் சுஜாதாவுக்கு இப்படி நான் எழுதவேண்டிய அவசியம் இருந்திருக்காது.
புத்தகம் படிக்க பிடிக்கும் என்றதும், பிடித்த எழுத்தாளர் யார் என்றார்? சட்டென்று நினைவில் யாரும் வராததால் அப்படி எல்லாம் யாருமில்லை என்று மழுப்பினேன். உடனே இந்த சுஜாதா மாதிரி என்று இழுத்தார். உடனே அவசரமாக ஆமாம் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்.
தீர்மானம் செய்தபின் ரசிகனாவது கொஞ்சம் சுலபமாகத்தான் இருந்தது. அது வரை சுஜாதாவின் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற புத்தகங்களை மட்டும் வீட்டு வாசலில் இருந்த ஒரு சின்ன கட்டண நூலகத்தில் தூசி தட்டி படித்திருந்தேன். அந்த நூலகத்தில் தூசி மட்டுமே இலவசம். இதன் பின் மேலும் தேட, கொஞ்சம் கொஞ்சமாக கணேஷ் வசந்த் உட்பட பலர் அந்த தூசிக்குள் இருந்து வெளிவர ஆரம்பித்திருந்தனர். ஏன் எதற்கு எப்படி என்ற மார்பகப்பால் கொடுக்கும் ஒரு பெண்ணின் படம் சற்று கிழிக்கப்பட்ட புத்தகமும் அந்த நூலகத்தில் இருந்து கிடைத்தது. ”ஏன் எதற்கு எப்படி”யில் ”எதற்கு” என்ற வார்த்தையும், ”ஏன்” என்ற வார்த்தையும் எந்தவிதத்தில் மாறுபடுகின்றன என்ற சிந்தனையிலேயே அந்த புத்தகத்தை படித்து முடித்தேன். கிட்டத்தட்ட மனப்பாடம் செய்தேன்.
அதன் பிறகு தான் ஆரம்பித்தது என் புத்தகக்காதல். அவர் சொன்ன ஒவ்வொன்றையும் தேடித்தேடி படித்தேன். இணையத்தில் தேடினேன். ஏற்கனவே கற்றதும் பெற்றதும் படிக்கத்துவங்கியதால், ஒவ்வொரு புத்தகமாக வேட்டையாடினேன். ஒவ்வொரு வருடமும் வந்து செல்லும் நெய்வேலி புத்தக கண்காட்சியில் வெறும் சுஜாதா புத்தகமாக வாங்கி சேர்க்க ஆரம்பித்தேன். எனது தொகுப்பு நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கும்போது அதில் சில புத்தகங்களை என் நண்பன் தொலைத்து, பின் மீண்டும் அவற்றை தேடிப்பிடித்த கதையும் நடந்தது.
சுஜாதாவின் அழகு அவரது சிக்கனத்தில் இருந்தது. அவரது வார்த்தைச்சிக்கனம் ஒரு புத்திசாலித்தனமான ஒரு எழுத்தை அடையாளம் காட்டிற்று. அதேபோல் அவரது எழுத்து ஒவ்வொரு தலைமுறைக்கும் மீண்டும் பிறந்து அந்தந்த தலைமுறைக்கு புதிதான ஒரு சுவையான அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு, கணையாழியின் கடைசிப்பக்கங்களும், கற்றதும் பெற்றதுமும். இரண்டும் கிட்டத்தட்ட அவரது பத்தி எழுத்துக்களே, ஆனால் அவரது எழுத்து அந்தந்த காலத்தை ஒத்து உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்றைக்கும் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் ருசியாக இருப்பது போல் எழுதுவது நிச்சயமாக அவ்வளவு எளிதல்ல.
சினிமா மற்றும் கவிதைத்துறையில், அவரது கைவண்ணம் மிளிர்ந்தது. ஹைக்கூவுக்குள் அழகாக கையைப்பிடித்து அழைத்துச்சென்று, இது ஹைக்கூ இதைப்படி ஒரு அனுபவமாக இருக்கும், இதைப்படிக்காதே இது மடக்கி எழுதப்பட்ட உரைநடை இதைப்படித்தால் பின்னந்தலை வலிக்கும் என்று சொல்லித்தந்தார். திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகம் இன்றும் மிகப்பிரசித்தம். ஆனால் அந்த புத்தகத்தில் கண்ணெதிரே தோன்றினாள் படமும் வந்தது எப்படி என்று புரியவில்லை. இதைக்கூட பகுத்துணரும் தன்மையை அளித்தது அவரே.
பல ஆண்டுகள் அவரது வருடாந்திர அவார்டுகளும் எனது மனதில் நான் நினைத்த அவார்டுகளும் பல முறை ஒத்துப்போய் இருந்ததில் ஒரு சந்தோஷம். ஆனால் அவரால் எனக்கு கிடைக்காத ஒரே ஒரு விஷயம் அவரை சந்திக்கும் சந்தோஷம். ஆனால் அதற்கும் அவர் ஒரு நல்ல வாசகன் வகையில் என்னைச்சேர்த்துருப்பது சந்தோஷம்தான். “ஒரு நல்ல வாசகன் அவனுக்குப் பிடித்த எழுத்தாளனைச் சந்திக்க மாட்டான்” - சுஜாதா
சுஜாதா எனக்கு ஒரு ஆசானாகவே இருந்திருக்கிறார். ஒரு ஏகலைவனாக அவரைப்பின்பற்றுவதில் பெருமிதம் அடைகின்றேன்.
“வாழ்க்கையிலும் விசிஆர் மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்”
“No body dies..they live in the genes and memories of their children”
லேபிள் சுஜாதா
ஹா ஹா ஹா
அருமையான பதிவு!!
இதை நானும் பலதடவி உணர்ந்திருக்கிறேன். அதே போல அவர் செய்யும் தேர்வுகள் , மற்றும் அவர் செய்யும் அறிமுகங்கள் எல்லாவற்றையும் உடனுடனே படிக்க முயன்றதும் உண்டு
நன்றி ஜோதிபாரதி
நன்றி அருண்மொழிவர்மன்
நன்றி வெட்டிப்பயல்
அவர் 80 களில் எழுதிய பல நாவல்கள் இன்றும் இளமை பொங்க என்னை போன்ற இளைஞர்களால் வாசிக்கப்படுகின்றது....:-)
ச்சே...என் காலத்தில் சுஜாதா இல்லாமல் போய்விட்டாரே...
புத்தகத்தின் மேல் காதலை உண்டாக்கியது அவரது எழுத்துக்கள் தான்.
எழுத்துக்களை ரசித்து படிக்க தொடங்கியது அவரது அறிமுகம் கிடைத்த பின் தான்.
அவர் மூலமாகவே எனக்கு சிறந்த எழுத்தாளர்களின்
(அ.முத்துலிங்கம்) அறிமுகம் கிடைத்தது.
அவர் ஏதோ ஒரு இடத்தில் நா.முத்துக்குமார் பற்றி குறிப்பிட்டார் என்பதால்,
அவரது பாடல்களை ரசிக்க தொடங்கி இன்று அவரது பாடல் எப்போது வரும் என்று காத்திருக்கிற அளவுக்கு
இருக்கிறது என் நிலைமை.
இன்றும் எனது ஆசானாக அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
சுஜாதா பற்றிய பகிர்வுக்கு நன்றி.
சுஜாதா என்ற பெயரை கேட்டாலே ஒரு உற்சாகம் தான்
நன்றி வாசுகி
நன்றி pappu