கிரிவலம்

ஒவ்வொரு பௌர்ணமியும் திருவண்ணாமலைக்கு புதுசாயம் பூசுகின்றது. சாயங்கள் அனைத்தும் அவசர அவசரமாக அழிபட்டு அடுத்தநாளில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றது ஊர். ஆனாலும் கிரிவலப்பாதை எங்கும் குப்பையையும் கற்பூர மணத்தையும் அப்படியே விட்டுவிட்டு.

திருவண்ணாமலையில் இருப்போருக்கு கிரிவலநாள் ஒரு அரசியல் ஊர்வலம் நடக்கும் நாள் போல, அவ்வளவு இடையூறுகள். ஆனால் மக்கள் அழகாக புதிய வழிகளை பின்பற்றி தங்கள் கூடுகளுக்கு திரும்புவர்.

இத்தனை திருவண்ணாமலை அனுபவங்களும் நான் அங்கு கல்லூரியில் படித்த காலத்தில் கிடைத்தன. கல்லூரி காலத்தில் நாங்கள் கிரிவலம் செல்கிறோம் என்றால் அந்த தினத்தன்று எங்கள் கல்லூரியின் பேர் பெற்ற ஃபிகர் ஏதாவது கிரிவலம் செல்வதைக்கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் பல ஆண்டுகள் கழித்து இன்று செல்வது என் அலுவலக நண்பருக்காக. நண்பன் என்று சொல்லாமல் நண்பர் என்று சொல்லுவதிலேயே தெரிந்திருக்கும் அவர் ஒரு அலுவலக நண்பர் என்று. அதுவும் மேல் அதிகாரி வேறு. அவரும் நானும் பலமுறை யோசித்து இறுதியில் இன்று செயல்படுத்தி வந்துவிட்டோம்.

பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்ததால் எப்படியோ கஷ்டப்பட்டு கோவில் வாசல் அருகே வந்தோம். அங்கு மிகப்பெரிய அளவில் கற்பூரங்கள் எரிந்து சூழ்நிலையை மாற்றிக்கொண்டிருந்தது. கோவிலுக்கும் சின்னதேர் இருக்கும் இடத்திற்கும் நடுவில் இருந்த மூத்திரசந்துகூட கற்பூரமணம் கமழ்ந்தது.

கிரிவலம் மக்களுக்கு ஆன்மீகத்தை விட வயிற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்பது வழியெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் இருந்தே கண்டுகொள்ளலாம். வீடுகள் கூட அந்த ஒரு நாளுக்காக ஏதோ ஒரு விதத்தில் கடையாக மாறிக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு வியாபாரி, தனக்கேற்ற வாடிக்கையாளனுக்கோ அல்லது சந்தர்ப்பத்திற்கோ காத்திருக்கிறான். எங்களை மட்டும் விட்டுவிடுமா இந்த இட்லிக்கடைகள்? நன்றாக சாப்பிட்டபின் நடக்கத் துவங்கினோம்.

எத்தனை விதமான மனிதர்கள், கிட்டத்தட்ட சென்னை தியாகராயநகரில் விழாக்காலத்தில் இருப்பதைப்போல, பாதிபேருக்கு மேல் கண்டிப்பாக பக்தியுடன் செல்லவில்லை என்று என்னால் எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்லமுடியும். சமூகம் நம்மில் இருந்தே தொடங்குகின்றது அல்லவா!

இப்போதெல்லாம் பலர் செருப்பு போட்டு சுற்ற ஆரம்பித்துள்ளனர். முன்பெல்லாம் வெறும் காலில் இரவில் சுற்றுவோம். ஆனால் திருவண்ணாமலையின் வெயில் பகலெல்லாம் தார்ரோடால் சேமித்துவைக்கப்பட்டு இரவில் வெளிவரும். நம் கால்களை கொப்புளம் போட. ஆனால் அடுத்தநாள் நன்றாக இருப்பதாகவே தோன்றும். என் கல்லூரி நண்பன் ஒருவனுக்கு காலில் ஆணி இருந்ததால் அடிக்கடி உட்கார்ந்துவிடுவான். தோளில் கைவைத்து வருவான். இப்போது அதைப்போன்ற மக்களைப்பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு என்ன வலியோ என்றுதான் எண்ணம் செல்கின்றது

திடீரென்று கடந்து செல்லும் பக்தர்குழுக்களின் உரத்த பாடல்கள், சைக்கிளில் செல்லும்போது லாரிக்காரன் ரோட்டோரமாய் அணைத்து செல்வதைப்போல் திடீரென்று நினைவு, பேச்சு அனைத்தையும் கலைத்து வேகமாய் செல்கின்றன. இந்த பாடலை அவர்கள் மனதார‌ப்பாடுகிறார்களா அல்லது அனிச்சையாய் பாடுகின்றார்களா என்பது புதிராக உள்ளது. அப்படி மனமின்றி பாடிச்செல்பவனில் ஒருவனாவது வீட்டில் தனியாய் விட்டுவந்த மனைவி மீது சந்தேகத்துடன் இருப்பான் தானே?

இப்படி எல்லாம் தான் நான் நினைத்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன். என் நண்பராவது நல்ல எண்ணத்துடன் வருவார் என்று நினைக்கிறேன். அவர் மீது அலுவலகத்தில் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை உண்டு. மனிதர் எப்போது எரிந்து விழுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று படு சாந்தமாக இருக்கிறார். யார் யாருக்கு என்ன என்ன கவலைகளோ?

அடிஅண்ணாமலை வந்தால் எப்பேறுபெற்றவனுக்கும் களைப்பு வரும். எங்களுக்கு தாகமும் சேர்ந்து வந்தது. இளநீர் குடிக்கச்சென்றொம். எல்லாவற்றையும் பற்றி கருத்து இருக்கவேண்டுமா என்ன? இளநீர் விஷயத்தில் தாகம் மட்டும்தான் இருக்கிறது.

இளநீர்க்காரன் மிக பிசியாக இருந்தான். அவனிடம் இருந்து வாங்குவதற்குள் நுரை தள்ளிவிடும்போல. கடைசியாக அவன் வாங்கிய விலையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலைக்கு வாங்கினோம். என் நண்பர் விலையை பேரம் பேச முயல அது அவனுக்குள் இருந்த முதலாளித்துவத்தை எழுப்பியது. கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்ததும், அலுவலகத்தில் அனைவரையும் போட்டு வாங்கும் நண்பர் முகம் சிவக்க கைநடுங்க அவனிடம் பேசிக்கொண்டிருந்தது என்னவோ போல் இருந்தது. ஒருவேளை நான் அங்கு இல்லாமல் இருந்து இருக்கலாம் என்று நண்பர் எண்ணுபவர் போல் காணப்பட்டார். நண்பரின் பேரத்திற்கு அவன் படிந்துவராததை ஸ்ட்ராவில் என் இளநீரின் சுவையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

"நீயே வச்சிக்கோ உன் இளனீய, தோப்பு விலை சொல்ற" என்றார் நண்பர் இறுதியாக‌.

"அருவா கழுத்தில் எற‌ங்கிடும். ஒழுங்கா வாங்கிட்டு போய்டு. வெட்டிவச்சிருக்க என்னை என்ன கேணப்**** நெனச்சியா? உன்கூட வந்த மனுஷன் அமைதியா குடிக்கல? உனக்கு மட்டும் என்ன ஒரு முழமா இருக்கு?" என்று இளநீர்க்காரன் அமைதியாக சொல்ல,

நண்பர், "சரி கொடு. அண்ணாமலையாருக்கு போட்டதா நெனச்சிக்கறேன்" என்றார்.

இளநீர் கொடுத்தான் என்பதை விட போட்டான் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு என் நண்பர் வாழ்நாளில் கேவலப்பட்டதே இல்லை என்பதுபோல் முகம் இருந்தது. இளநீர் விற்பவர் என்று சொல்ல மனமின்றி விற்பவன் என்று சொல்கிறேன். யார் சொல்லிக்கொடுத்தது இது?

இளநீர் குடுத்ததும் உள்ளே இருக்கும் வழுக்கைத்தேங்காயை எடுத்துக்கொடுக்க அவனிடம் இருவரும் சென்றோம். என் நண்பனைப்பார்த்ததும் என்ன நினைத்தானோ தெரியவில்லை, "அதெல்லாம் வெட்டித்தரமுடியாது இருக்கற கும்பல பார்த்த இல்ல, வேணும்னா பையில போட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் வெட்டித்துண்ணு" என்றான். நானும் இதற்காய் காத்திருந்தது போல, "வாங்க சார் போகலாம், இந்த இளனீல வழுக்கையே இருக்காது. நாமதான் அவசரப்பட்டு அவன்கிட்ட கேட்டுட்டோம்" என்றேன்.

நண்பருக்கு இதைவிட ஒரு நல்ல கிரிவலம் அமைந்திருக்காது என்று நினைத்திருக்கையில் 2 போலீஸ்காரர்கள் வந்தனர். இதுவரை முதலாளிபோல் இருந்த இளநீர்க்காரன் சற்று மிரள ஆரம்பித்தான்.

நடக்க ஆரம்பித்த என்னை நண்பர் நிறுத்தினார். கொஞ்சம் இருங்க ரெஸ்ட் எடுத்துவிட்டு போகலாம் என்றார்.

எதற்காக அந்த போலீஸ்காரர் அந்த இளநீர்க்காரனை அறைந்தார் என்பது கேட்கும் தொலைவில் நாங்கள் நிற்கவில்லை. ஆனால் அறை பொளேரென்று விழுந்தது மட்டும் கேட்டது. அவன் கைகட்டி குனிந்து நின்றான். அவனது பக்கத்தில் ஒரு சின்னபையனும் அதே நிலையில் கை கட்டி நின்றிருந்தான். சற்று முன் பிரம்மாண்டநாயகனாய் இருந்த இளநீர்க்காரன் திடீரென்று பாதாளத்தில் நின்றிருந்தான். என் நண்பரை மிரட்டியது மட்டும் இளநீர்க்காரன் பிரம்மாண்ட நாயகனாய்த்தெரிய காரணம் இல்லை என்று நம்பிக்கொண்டிருந்தேன்.

ஒரு பலத்தின் முன்பு அடிமையாய் கூனிக்குறுகி நின்றுகொண்டிருந்தான். முதலாளித்துவம் என்று சொன்னதை எல்லாம் திரும்பபெறுகிறேன். பலத்தின் முன் அனைவரும் சப்பைதான். அவனது அவமானத்தை ஏதோ ஒரு விதத்தில் என்னாலும் உணர முடிந்தது.

அலுவலகத்தில் மேல் உள்ளோரிடம் படும் அவமானத்திற்கு இது சற்றும் குறைந்ததல்ல. வலியோரிடம் படும் அவமானம் மட்டும் எப்பொதும் உரைப்பதே இல்லை. ஆனால் மனதில் எங்கோ சென்று மறைந்துகொள்கின்றது, மீண்டு எழ துணிச்சலின்றி அப்படியே வடு மேல் வடுவாய் படிந்து விடுகின்றது. சமயத்தில் வடுவின் வலி அதிகரிக்கும்போது, குடும்பத்திலோ இல்லை நமக்கு கீழ் உள்ளோர் மேலோ ஆயுதமாய் செலுத்தப்படுகின்றது. தற்கால வருணாசிரமம் மிகவும் கொடியதாய் உள்ளது. மனதையும் புதுவிதமாய் காயப்படுத்துகின்றது.

எல்லாம் முடிந்தபின் நண்பர் சொன்னார், "அப்போவே சொன்னேன் இல்ல, அண்ணாமலையான் பார்த்துப்பான்னு".

எங்கிருந்தோ ஓடிவந்துகொண்டிருந்த கூட்டம் "அண்ணாமலையானுக்கு அரோகரா" என்று கத்திக்கொண்டே சென்றுகொண்டிருந்தது. இங்கு இருந்த மக்கள் கூட்டம் பக்கத்தில் இருந்த சோளக்கடைக்கு மாறிச்சென்று அங்கு கொறிக்கத்தொடங்கியது.

4 Comments:

 1. Nellaitamil.com said...
  ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்.

  குரூப் அமைப்பதற்கான வசதி...
  வாரந்திர சிறந்த இடுகைகள் தானியங்கி முறையில் தேர்வு....
  ஓட்டளிப்பு பட்டை...
  இன்ன பிற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன்....

  தளமுகவரி

  nellaitamil
  pappu said...
  நடை பிடிச்சது.
  எம்.எம்.அப்துல்லா said...
  //தற்கால வருணாசிரமம் மிகவும் கொடியதாய் உள்ளது. மனதையும் புதுவிதமாய் காயப்படுத்துகின்றது.

  //

  ஒவ்வொரு வினைக்கும் சமமான ஒரு எதிர்வினை உண்டு.

  அருமையான பதிவு.
  கிஷோர் said...
  நன்றி நெல்லைத்தமிழ்

  நன்றி பப்பு

  கருத்துக்கு நன்றி அப்துல்லா

  :)

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.