நான் படித்த செயிண்ட் ஜோசப் பள்ளியின் கிறிஸ்துமஸ் அனுபவம் இது. ஏற்கனவே இங்கு ஒலிம்பிக் பற்றி எழுத ஆரம்பித்து பாதியில் நிற்கிறது, அதற்கே ஃபாதரிடம் அடி விழுமோ என்ற பயத்துடன் இதை சொல்ல விழைகிறேன்.
கடலூரில் உள்ள பள்ளிக்கூடங்களில் பெரும்பான்மையானவை கிறித்தவ பள்ளிகளே (செயிண்ட் ஜோசப்(மெயின்), செயிண்ட் ஜோசப்(கம்மியன்பேட்டை), செயிண்ட் ஜோசப்(கூத்தப்பாக்கம் கான்வெண்ட்), செயிண்ட் ஆன்ஸ்(சுமாரான பெண்கள்), செயிண்ட் மேரீஸ்(சூப்பர் பெண்கள்) மேலும் சில கொசுறுகள்). இங்கு நம்ம மாரிமுத்து வாத்தியார் இருப்பது செயிண்ட் ஜோசப் மெயின் பள்ளியில்.
கிறித்தவ பள்ளிகளில் பெரும்பாலும் அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை என்ற பெயராலேயே விடப்படும். அதற்கு ஏற்றார்போல், தேர்வு நடக்கும்போது கிறிஸ்துமஸ்(முன்னதாக, விடுமுறையில் வரச்சொன்னால் யாரும் வர மாட்டார்கள்) கொண்டாடப்படும். சாதாரணமாக நடக்கும் 5 தேர்வுகளுடன் நல்லொழுக்கம்(கிறித்தவர் அல்லாதவர்களுக்கு) அல்லது மறைக்கல்வி(கிறித்தவர்களுக்கு) தேர்வு ஒரு சனிக்கிழமையில் நடக்கும். அது ஒரு 1 மணி நேரத்தேர்வுதான் என்பதால் அது முடிந்தவுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும்.
உண்மையில் கொண்டாடுவதென்னவோ அதிர்ஷ்ட-மாணவர்கள் தான். ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ஒரு மாணவனை ரேண்டமாக தேர்ந்தெடுத்து(கணினி மூலம்), அவனுக்கு கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்துமஸ் தாத்தா மூலம் பரிசு வழங்கப்படும். பரிசென்னவோ சோப்பு டப்பா அளவில்தான் இருக்கும்(எனக்கு 12 வருடங்களில் ஒரு முறைகூட கிட்டியதில்லை) ஆனால் அது பயங்கர பெருமையையும், பிறந்தநாள் புது துணி போட்ட சந்தோஷத்தையும் கொடுக்கும்.
இந்த மாரிமுத்து வாத்தியார் பற்றி சொல்லியே ஆகவேண்டும், கிட்டத்தட்ட எங்கள் பள்ளியின் மிகவும் சுறுசுறுப்பான, துடிப்பான, மிக அதிக நகைச்சுவை உணர்வு கொண்ட வாத்தியார் இவர். பார்ப்பதற்கு தாடி இல்லாத பாலைவனச்சோலை சந்திரசேகர் நல்ல சிவப்பாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார். உடையும் கிட்டத்தட்ட அப்படியே. இவரது வகுப்பில் பயின்ற ஒவ்வொருவரும் கண்டிப்பாக அழகான கையெழுத்துடனோ அல்லது முட்டி உடைந்தோ அடுத்த வகுப்பு செல்வது வரலாறு. எனக்கு இதுவரை இவர் எடுத்ததில்லை மன்னிக்கவும், நான் இதுவரை இவருடைய வகுப்பில் இருந்ததில்லை. ஒவ்வொரு விளையாட்டுதினத்தன்றும் லைவ் கமெண்டரி கொடுக்க இவரைத்தான் அழைப்பார்கள். மைதானமே கலை கட்டும். இவர் சென்னை பாஷையில் பேசி கலாய்ப்பது அட்டகாசமாக இருக்கும். இவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் உன் பொண்டாட்டிய நண்டு கடிக்கோ.
ஒருமுறை ஒரு மாணவன் ஒவ்வொரு நாளும் இவரது வகுப்பில் கழிவறை செல்ல, ஒரு நாள் அவனை பிடித்து, சோதனை செய்து பிடித்தார். ஆனாலும் அடிக்கவில்லை.
இப்படிப்பட்ட மாரிமுத்து வாத்தியார்தான் ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வருவார். அவரது வேடம் கனக்கச்சிதமாக இருக்கும். அவர் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வாகனத்தில் வருவார். அதுவே மிகப்பெரிய வரவேற்பை பெறும். சில முறை ஃபாதரின் காரிலும், பைக்கிலும், மொபெட்டிலும், சைக்கிளிலும், மாட்டுவண்டியிலும் வந்திரங்கும் போது............... சொல்ல வார்த்தைகள் இல்லை அந்த கரகோஷத்தை சொல்ல.
மேடைக்கு அந்த தொப்பையை குலுக்கிக்கொண்டு வந்து மேடையில் இருக்கும் ஃபாதரிடம் வம்பு செய்வார். பின் சாக்லெட்களை தூக்கிப்போடுவார், இல்லாத சேஷ்டைகள் எல்லாம் செய்வார். பின் சென்னை தமிழில் ஒரு லெக்சர் கொடுப்பார். ஹூம்ம்ம்ம் Good old days. பின் பரிசுகளை வழங்குவார். எல்லாம் முடிந்தபின் ஒரு பாடலை பாடி ஆடிவிட்டு செல்லுவார்.
அடுத்த நாள், முந்தின நாள் சாயலே இன்றி தேர்வுக்கு வகுப்புக்கு வருவார். அப்போதும் அவரிடம் அந்த கிறிஸ்துமஸ் தாத்தா ஒளிந்திருப்பாரோ என்று அனைவரும் ஓரக்கண்ணால் பார்த்தபடியே தேர்வெழுதுவோம்
எங்கள் பள்ளியில் படித்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவை அறிமுகப்படுத்தி, இன்று வரை கிறிஸ்துமஸை நினைத்தாலே அவரது முகம் வருமளவு ஆக்கிவைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல.
நன்றி சார்.
லேபிள் கிறிஸ்துமஸ், செயின்ட் ஜோசஃப்
அன்புடன் அருணா