இந்த முறை இந்திய பயணத்தின்போது(சிங்கப்பூரில் இருந்து) பல திட்டங்களோடு சென்றிருந்தேன். ஆனால் இறுதியில் ப்ராஜெக்டில் இருந்து வேலை வந்து விட்டதால், வீட்டை விட்டு வெளியே கூட செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே மாட்டிக்கொண்டேன். ஆற்காட்டார் புண்ணியத்தில் கரண்ட் வேறு இல்லாத‌தால் ஏரியா விட்டு ஏரியா மாறி சென்று கொண்டிருந்தேன்(ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு நேரத்தில் கரண்ட் கட் செய்யப்படுவது மரபு)

இப்படிப்பட்ட நேரத்தில் நீண்ட நாட்களாக படிக்க எண்ணியிருந்த புத்தகங்களை படிக்க துவங்கினேன். சென்னை ஹிக்கிம்பாதம்ஸ் புத்தகக்கடையில் தமிழுக்கான பகுதி மிகக்குறைவாகவே இருந்தாலும் கிட்டத்தட்ட முக்கிய புத்தகங்கள்(நல்ல விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்கள்) கிடைக்கின்றன. சென்ற முறை ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்கா முதல் கங்கை வரை கூட அங்கு தான் வாங்கினேன்

ஆனால் இந்த முறை சாருவின் ஸீரோ டிகிரியும், ராஸலீலாவும் வாங்க முடிவு செய்து சென்றேன். ஆனால் ஸீரோ டிகிரி கிடைக்கவில்லை. ராஸலீலா மட்டுமே கிடைத்தது. அருகிலேயே வாத்தியாரின் "ரத்தம் ஒரே நிறம்" புத்தகமும், ஆங்கிலத்தில் புகழ் பெற்ற ராபின் ஷர்மாவின் "The Monk Who Sold His Ferrory" தமிழாக்கம் "தன் பொக்கிஷத்தை விற்ற துறவி" புத்தகமும் கிடைத்தன.

வாங்கியவுடன் "ரத்தம் ஒரே நிறம்" புத்தகத்தை பிரித்து மேய்ந்தேன். ஆட்டோவில் வரும்போதே புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். இந்த புத்தகம் பற்றி ஏற்கனவே யாழிசை ஒரு இடுகை இட்டிருக்கிறார். வழிமொழிகிறேன்.

பிறகு ஆரம்பித்தேன் ராஸலீலாவை, கிட்டத்தட்ட 700 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. இந்த புத்தகம் ஒரு திரைப்படம் பார்ப்பது போல்தான் இருந்தது. வெறித்தனமாக அந்த முழு புத்தகத்தையும் 1 நாளில் படித்து முடித்தேன். என் அம்மா, அப்படி என்னத்த தான் படிக்கிற? இதுக்கு தான் ஊரில் இருந்து வந்தியா? என்று அலுத்துக்கொண்டது வேறு கதை.

ஒரு டைரியை படிப்பது போலத்தான் இருந்தது இப்புத்தகம் படிப்பது. சாருவின் வித விதமான சம்பவங்களின் தொகுப்பு. அவரது தபால் அலுவலக வாழ்க்கை பற்றிய அவரது கதைகள், நீண்ட நாட்கள் முன்பு படித்த ருஷ்ய சிறுகதைகளை நினைவுபடுத்தின. நம்மை பெருமாளுடன் இணைத்து பார்க்கமுடிகிறது. இந்த பக்கங்களை படிக்கும்போதே ஏதோ அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தது போல் இருந்தது, அரசு அலுவலகங்களுக்கென்று ஒரு தனி வாசனை உண்டு. அந்த வாசனை படிக்கும்போது வந்தது.

பெருமாளிற்கு மட்டும் எப்படி இவ்வளவு நண்பர்கள் விதவிதமாக கிடைக்கின்றார்களோ தெரியவில்லை. ஹூம்ம்ம்ம்

பிற்பாடு வருகின்ற வித விதமான பெண்களும், அவர்கள் பெருமாளிற்கு அடிக்கின்ற ஆப்புகளும் முழுக்க முழுக்க எதார்த்தம். அதிலும் அந்த மலேசியப்பெண் இந்தியா வரும்போது சந்திக்கவில்லை என்பது பற்றி பெருமாளின் வருத்தங்கள், நான் இந்தியா சென்று நண்பர்களை கூட சந்திக்காமல் திரும்பி வந்த சம்பவங்களை நினைவுபடுத்தின. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித காரணங்கள் உண்டு. அது அவரவர்களுக்கு பொருத்தமானதாகவே தோன்றும். அடுத்தவர்களுக்கு அது தோன்றாததுதான் வாழ்க்கையின் எதார்த்தமான சுவாரசியம்.

பெருமாள் நல்ல சுகவாசியாகத்தான் இருந்திருக்கிறார், தற்கொலை செய்துகொள்ளும் அந்த அமெரிக்கப்பெண்ணைப்போல் நடைமுறையில் பல பெண்களை பார்க்கமுடியும். என்ன ஒன்று, முக்கால்வாசிப்பேர்ஆண்களை தற்கொலை செய்யத்தூண்டி விடுவார்கள்.

பிற்பாடு வந்து செல்லும் அந்த சி மேட்டர்களும், உலகவங்கி விவகாரங்களும் எனக்கு "Lock Stock and Smoking Barrels" படத்தை நினைவூட்டின.

ஆனால் புத்தகத்தின் எரிச்சலான விஷயங்கள் எங்கு பார்த்தாலும் மேலோங்கி இருக்கும் ஒரு ஆதிக்கத்தனம் மற்றும் மேதாவித்தனம் (போன்று காட்டிக்கொள்ள முயலும் ஒரு தன்மை). ஒரு down to earth approach இல்லாதது நாம் சில கதைகளோடு இணைவதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

அடுத்த எரிச்சல், எங்கும் அடைத்திருக்கும், ஈமெயில் மற்றும் SMS களும். சில உறவுகளை கொண்டாடுவதும், அது முறியும் போது ஏறி மிதித்து அதன் மீது மூத்திரம் பேய்வதும் ஒரு வித சாடிசத்தை காட்டுகின்றது.

மொத்தத்தில் படிக்கவேண்டிய உணரவேண்டிய ஒரு படைப்பு, ஆனால் முழு புத்தகத்தையும் அல்ல என்பது என் அனுபவம்.

அடுத்த புத்தகமான "தன் பொக்கிஷத்தை விற்ற துறவி", இன்னும் நான் முழுதாக படித்து முடிக்கவில்லை. நான் படித்த வரையில் ஓரளவிற்கு நன்றாக இருக்கின்றது. ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கும் போது இருந்த ஒரு கவர்ச்சி இந்த தமிழ்நடையில் இல்லை.

மேலும் புத்தகத்தின் லேஅவுட் கண்றாவியாக உள்ளது. ஃபான்ட் படிக்கத்தூண்டாமல், புத்தகத்தை மூடத்தூண்டுகின்றது. ஹும்ம்ம்ம் படித்துப்பார்த்து சொல்கிறேன்.


4 Comments:

 1. Ramesh said...
  Good flow!
  கிஷோர் said...
  Thanks Ramesh :)
  venkatx5 said...
  எனக்கு சாருவின் படைப்புக்களில் பெரிய ஈடுபாடு இல்லை.. இருந்தாலும் படித்து பார்க்கலாம் என்கிற ரகம்..
  நீங்க சொல்ற மாதிரி ஆதிக்கம் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தும்..
  கிஷோர் said...
  வருகைக்கு நன்றி venkatx5

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.