நான் படித்த புனித வளனார் மேல்நிலை பள்ளி(மெயின்) விளையாட்டிற்கு பெயர் போன பள்ளி. நான் 1ம் வகுப்பு சேர்ந்த போதே(1989) பெரிய மைதானம் இருந்தது. சில வருடங்களில் அங்கு கேலரி கட்டப்பட்டது. விளையாட்டையும் எங்கள் பள்ளியையும் பிரித்துப்பார்ப்பதென்பது இயலாத காரியம்.
அந்த மைதானம் எத்தனை வியர்வைத்துளிகளையும் இரத்ததுளிகளையும் சந்தித்திருக்கும் என்பது அங்கு படித்து வளர்ந்தவர்களுக்குத்தான் புரியும். விளையாட்டை படிப்பாகவும், படிப்பை விளையாட்டாய் கொண்டவர்களும் காணப்படும் பகுதி அது.
நாளடைவில்(வருடடைவில்) மைதானத்தில் அத்லெட் ட்ராக் போடப்பட்டு அங்கு கருப்பு நிற மண்ணால் நிரப்பப்பட்டது. அன்று ஆரம்பித்தது எங்கள் மைதான மோகம். அந்த மண் பற்றி பல கதைகள் புழங்க ஆரம்பித்தன.
கதைகள் எங்கள் பள்ளிக்கு புதிது அல்ல. ஹாஸ்டல் மற்றும் போர்டிங் பயல்கள் கிளப்பிவிடும் கதைகள் ஒவ்வொருவரிடம் மாறி சென்று ஒரு வித்தியாசமான பரிமாணத்தை தொடும். கழிவறைக்குழியில் இருந்து கை வந்த கதை மிகப்பிரசித்தம்.
அந்த மண் பற்றிய கதைகளுக்கு அளவே இல்லை. அந்த மண் ஃபாரீன் மண் முதல் வடநாட்டு கரிசல் மண் வரை பல ஊகங்கள் இருந்தன. அந்த மண்ணை ஒரு கைப்பிடியாவது வீட்டுக்கு கொண்டு செல்லாத பயல்கள் இருக்க முடியாது. அதிலும் அந்த மண்ணில் காலைத்தேய்த்தால் ஷூ பாலிஷாகவும் இருப்பதும் சீக்கிரத்திலேயே கண்டறியப்பட்டது.
கால் முழுக்க கருப்பாக அனைவரும் விளையாட்டு வீரராக விரும்பினோம். அப்போது வெள்ளை சட்டையும் கருப்பாக, பள்ளியில் விளையாடுவது வீட்டுக்கும் தெரிந்து உதையும் வாங்கிக்கொண்டு இருந்தோம்.
அந்த மைதானத்தில் இன்னும் சில ஆண்டுகளில், ஒரு ஒலிம்பிக் சிலை கட்டப்பட்டது(பார்சிலோனா ஒலிம்பிக்கை ஒட்டி என்று நினைவு). அதற்கும் ஊகங்கள் குறைவில்லாமல் ஆரம்பித்தன.
அடுத்த ஒலிம்பிக் நம்ம மைதானத்தில் தான் நடைபெறப்போகிறது என்று ஆரம்பித்துவைத்தனர் பள்ளி செல்வங்கள்(ஒரு பாதிரியார் இப்படி தான் கூப்பிடுவார், ஆனால் விடைத்தாள் கொடுக்கும் போது அடி பின்னி எடுப்பார்).
இப்படி ஒரு ஊகம் ஆரம்பிக்க காரணங்களும் சற்று வலுவாகத்தான் இருந்தன. ஒவ்வொரு விளையாட்டுக்கும் கிட்டத்தட்ட கீழ்க்கண்ட அளவு விளையாட்டரங்கள் இருந்தன.
Hockey: 2
Football: 3
Basket ball: 5
Volleyball, tennis courts: 5
மேலும் நமக்கு பழக்கப்பட்ட மிகப்பெரிய மைதானம்.
பதிவு சற்று பெரிதாகிவிட்டதால், அடுத்த பதிவில் தொடர்கிறேன்....
லேபிள் அனுபவம், கடலூர், செயின்ட் ஜோசஃப்
// காரணங்களும் சற்று வலுவாகத்தான் இருந்தன. //
பாஸூ....இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத்தெரியல!!!அப்ப எங்க ஸ்கூல்ல 2 football கிரவுண்டு இருக்கு...world cup நடத்திடலாமா!!!
கண்டிப்பா, பட்டைய கிளப்பிடுவோம் :)
:-)))....