மிஷ்கின் திடீரென்று வந்து தனக்கென தனியிடத்தை பிடித்து தனக்கென தனி பாணியையும் உருவாக்கிக்கொண்டுள்ளவர். இங்கு திடீரென்று என்று கூறப்படுவது முதல் படத்திலேயே கவனத்தை திசை திருப்பியவர் என்றதால்.
மிஷ்கினின் படங்களில்(இதுவரை இரண்டு தான்) சில விஷயங்களை நாம் எளிதில் கவனிக்கலாம். மிஷ்கினின் படங்களில் எதார்த்தம் என்பது மிகக்குறைவாக இருக்கும். நடிகர்களின் நடிப்பில் ஒரு புதுவிதமான் நாடகத்தனம் தெரியும். இருப்பினும் மக்களின் நாடி பிடித்து அதற்கேற்றார்போல் இவரது திரைக்கதை இருப்பது தான் இவரது வெற்றியின் ரகசியம்.
இவரது சித்திரம் பேசுவதடி வெளிவந்தபோது கானா உலகநாதன் புண்ணியத்தில் படம் மக்கள் மனதில் இடம் பிடித்தது. பாடலுக்காக படம் பார்க்கவந்தவர்களுக்கு படத்தில் இருந்த புத்துணர்ச்சியான சில விஷயங்கள் பிடித்துப்போயின. ரவுடிகள் பிண்ணனியில் நடக்கும் காதல்கதைகள் தமிழ் சினிமாவில் ஏராளம். கிட்டத்தட்ட எல்லா தெருக்களில் இருக்கும் பழைய போஸ்டர்களில் ஒன்று இந்த வகைக்கதையுடன் தான் இருக்கும். ஆனால் இதையும் மீறி அந்த படம் வெற்றிபெற்றதற்கு காரணம் படம் முழுக்க பார்வையாளர்களை வசப்படுத்தி வைத்திருந்ததுதான். படம் இறுதியை எட்டும்போது கொஞ்சம் தொய்வாய் இருந்ததென்னமோ உண்மைதான். படம் மிகவும் பாசிடிவாக இருந்தது மேட்டினி ஷோவில் படம் விட்டுச்செல்லும் மக்களுக்கு கூட தலைவலியின்றி செல்ல உதவியது.
அஞ்சாதேவிலும் கானா/குத்துப்பாடல்கள் இருந்தாலும் படம் பெயர்பெற சித்திரம்பேசுதடி படமே போதுமானதாக இருந்தது. இயக்குனர் இந்த படத்தை திரையுலகம் மீதுள்ள வெறுப்பினால் எடுத்ததாக கூறுகிறார். அவரது நந்தலாலா வந்திருக்கவேண்டிய நேரம் அது. அந்த படத்திற்கு சரியாக கிடைக்காத ஒத்துழைப்பினால் எப்படியாவது நன்றாக ஓடும் ஒரு வர்த்தகப்படம் எடுத்து தன் பெயரை நிலைநிறுத்திக்கொள்ளும் கட்டாயத்தில் எடுத்தபடம் இது. அதனாலேயே சில காட்சிகள் பகிடி போல் இருக்கும். அஞ்சாதே சற்று அனைத்து களங்களையும்(காதல், நட்பு, சென்டிமென்ட், ரவுடிகள், துப்பறிதல்) கலந்துகட்டி ஒரு சூப்பர் மசாலாவாக இருந்தது.
இந்த இரண்டு படங்களிலும் சில விஷயங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்ந்து வந்திருந்தன. அவற்றைப்பற்றி...
- இரண்டிலும் கதாநாயகர்கள் வீட்டை மதிப்பதில்லை
- இரண்டு படங்களிலும் தங்கைகள் முக்கிய கதாபாத்திரங்கள். அஞ்சாதேவில் நரேன் மற்றும் அஜ்மல் இருவருக்கும் தங்கைகள் உண்டு. இரண்டு படங்களிலும் தங்கைகள் முக்கிய கதாபாத்திரங்கள்
- ஏதேனும் ஒரு கதாபாத்திரம் எப்போதும் குடியிலேயே இருக்கும். சித்திரம் பேசுதடியில் நண்பன், அஞ்சாதேயில் பாதிபடம் டாஸ்மாக் தான்
- சண்டைக்காட்சிகள் ஒருவன் ஒருவனுடன் மோதுவதாக இருக்கும். கூட்டமாக வில்லன் ஆட்கள் வந்தாலும் கதாநாயகனுடன் ஒருவர்தான் மோதுவான். அதுவும் சண்டை வித்தியாசமாக இருக்கும். கதாநாயகனுக்கு ஏதோ வெயில் தலைக்கு ஏறியது போல் இருக்கும் சண்டைகள்
- 'அய்யோ' என்ற வசனம் இரண்டு படத்தின் கிளைமாக்ஸிலும் உண்டு. சித்திரம்பேசுதடியில் கதாநாயகன் 'அய்யோ சாரு' என்பான். அஞ்சாதேயில் விஜயலட்சுமி, 'அய்யோ அண்ணா' என்பாள். இது எதேச்சையாக நடக்கும் விஷயமாக தெரியவில்லை. சித்திரம்பேசுதடியில் இந்த வசனம் மிகப்பிரசித்தம்.
- ரவுடிகளின் பின்புலம் வித்தியாசமான இடங்கள். சித்திரம்பேசுதடியில் வாழைமண்டி. அஞ்சாதேயில் ஒரு மெக்கானிக் ஷெட் மற்றும் ஐஸ் ஃபேக்டரி
- இரண்டு படங்களிலும் மெல்லிய அதிர்ச்சி படத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்.
லேபிள் சினிமா