அதீத வேலையும், தேர்தல் பொருட்டு உடையும் பிம்பங்களும், வாக்குறுதிகளும் மனச்சோர்வை அளிக்கின்றன. கையாலாகாத்தனமும் வோட்டுகளின் பலவீனமும் இருக்கும்வரை இந்தியா வளரப்போவதில்லை. இதைப்பற்றி எழுதியும் ஒரு பலனும் இல்லை.

எழுதுவது ஏன் என்ற கேள்வியும், எதை எழுதுவது என்பது பற்றி மீண்டும் ஒருமுறை சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். பலர் சிறப்பாக எழுதுகின்றனர் அதை படித்துக்கொண்டிருப்பதே இன்பம் அளிக்கின்றது.

சமீபத்தில் பார்த்த படங்களில் டில்லி 6, வெண்ணிலா கபடி குழு, லாடம் நன்றாக இருந்தன. லாடம் நல்ல படம் என்று சொல்லமுடியாத வரிசை ஆனால், சார்மிக்காகவும் வித்தியாசமான உருவாக்கத்திற்காகவும் பார்க்கலாம்.

ஆனந்த தாண்டவம் பாடல்கள் பற்றி ஆந்திர நண்பர் ஒருவர் கேட்டதால் கேட்டுப்பார்த்தேன். நன்றாக உள்ளன.

தேவனின் சிஐடி சந்துரு நாவல் படித்தேன். அந்த காலத்திற்கு நன்றாக இருந்து இருக்கலாம். இப்போதைக்கு நேர விரயம். கதாநாயகன் இருந்த இடத்திலேயே எல்லாம் ஞானதிருஷ்டி போல கண்டறிகின்றான். கிழக்கு பதிப்பகம் வெளியீட்டில் படித்தேன்.

கிழக்கு பதிப்பகம் ஒரு புதிய திரட்டியை ஆரம்பிக்கலாம்(எனக்கு தெரியவில்லை, இருந்தாலும் இருக்கலாம்). ட்விட்டரை முழுவதும் வியாபித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் செயல்ப‌டுவதாக தோன்றுகின்றது. ஒரு கார்பரேட் நிறுவனம் போல்.

கொஞ்சம் வித்தியாசமான தலைப்பும் அங்கும் இங்கும் இருந்து மொழிபெயர்க்கும் திறமையும் இருந்தால், கிழக்கு பதிப்பகத்தில் ஒரு புத்தகம் எளிதில் எழுதிவிடலாம். அப்படியே பெயருக்கு முன் ரைட்டர் என்று போட்டு ஒரு இணையத்தளமும் ஆரம்பித்துக்கொள்ளலாம்.

இந்த வக்கீல் போலீஸ் பிரச்சினை இத்தோடு முடியப்போவதாக தெரியவில்லை. யார் பக்கம் நியாயம் இருக்கின்றது என்பது இவ்வளவு இடியாப்பச்சிக்கலாக இருந்தால், அதை தேர்தலில் பரிமாறுவது கடினம். எனவே எதிர்கட்சிகளுக்கு இந்த விஷயம் அவ்வளவு பெரிய அவல் அல்ல.

என் தங்கையும் காதலியும் அடிக்கடி இங்கு வந்து படிப்பதால், பொறுப்புடன் எழுதவேண்டி இருக்கின்றது. எழுதிய சிலவற்றை அவசரமாக அழிக்கவும் நேரிடுகின்றது. :)

சில பதிவுகள் படிப்பதை மற்றும் சிலபேரை ட்விட்டரில் தொடர்வதை நிறுத்தியபின் நாட்கள் நிம்மதியுடன் கழிகின்றன.

அன்னியநாட்டு வாழ்க்கையை சீக்கிரம் முடித்துக்கொண்டு வீடு திரும்ப நாளுக்கு நாள் கோரிக்கை வலுக்கின்றது. ஏடிஎம்மில் பின் நம்பருக்கு 6 எண்களுக்கு பதில் இந்தியா போல் 4 நம்பர்கள் அழுத்தியபோதே நானும் இந்தியா செல்ல தயாராகிவிட்டேன் என்பது தெரிந்துவிட்டது.

"வெளிநாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா"

ஆனால் பொருளாதாரத்தால் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் எந்த முடிவும் துணிச்சலாக எடுக்க முடிவதில்லை.

எப்போதும்போல் வடுவூர் குமார் அட்டகாசமாக எழுதிவருகின்றார். துபாயில் அவருக்கு பக்கத்தில் நாமும் இருப்பதுபோல் வாராவாரம் ஊர்சுற்றிக்காண்பிக்கிறார்.

http://madavillagam.blogspot.com

முழு கதையும் ஒரு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை மறு&குறுக்குவிசாரணைகள்தான். இப்படி ஒரு கதையை படித்துவிடமுடியுமா என்ற சந்தேகத்துடன் ஆரம்பித்த என்னை, வெகு சில பக்கங்களுக்குள் முடிந்துவைத்துக்கொண்டது இந்தக்கதை.

ஒரு பெரிய பணக்காரர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு மீண்டும் உடல் தேறிவரும்போது மர்ம‌மான முறையில் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழக்கிறார். இங்கு சமய சந்தர்ப்பங்கள் வீட்டின் பெரியமாப்பிள்ளைக்கு பாதகமாக இருக்கின்றது.

அரசுதரப்பு வக்கீலுக்கு மாப்பிள்ளையை தூக்குக்கு அனுப்பியாக வேண்டிய சூழ்நிலையை வெகு சுலபமாக உருவாக்குகின்றனர் அரசுதரப்பு சாட்சிகள்.

ஆனால் எதிர்தரப்பு குற்றவாளி தரப்பு வக்கீல் அனைத்து சாட்சிகளையும், ஆயில்பேட்டால் டென்னிஸ் பந்துகளை அடித்து விளாசுவதுபோல் அனாயசமாக அடித்து ஆடுகின்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த வழக்கின் 9 ஜூரர்களையும் சம்மதிக்கவைக்கவேண்டும்.

இத்தனையையும் கடந்து வழக்கில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் கதை.

இந்த கதை பல இடங்களில் உணர்ச்சிவசப்படவும், கண்கலங்கவும், புல்லரிக்கவைக்கவும், சிரிக்கவைக்கவும் செய்தது.

அந்த காலத்து பேச்சுநடையும், நீதிமன்ற செயல்பாடுகளையும் விளக்கமாய் எடுத்துரைக்கின்றார் தேவன்.

நல்ல ஒரு வாசிப்பனுபவத்தை கொடுக்கும் புத்தகம் இது.

சுஜாதாவின எழுத்துநடையில் சாதாரண லீவ் லெட்டர் எழுதினாலே சுவையாக இருக்கும். அதுவும் மர்மநாவல் என்றால் கேட்கவேண்டுமா?

சுஜாதா ஒருகாலகட்டத்தில் நிறைய மர்மக்கதைகள் எழுதினார், ஆனாலும் அவர் அந்த கதைகளுக்காக மக்கள் மனதில் நிலைத்திருக்கவிரும்பவில்லை என்று தெரிகின்றது. அவரது காவியக்கதாபாத்திரங்கள் கணேஷ் மற்றும் வசந்த். இந்த பெயர்களை கடக்காமல் ஒரு வாசகன் உருவாக வாய்ப்பில்லை.

கணேஷ் வசந்த் பற்றி இங்கு சொல்லப்போவதில்லை, அவர்களைப்பற்றி தனியாக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். இந்த நாவலைப்போல் இவர்கள் இருவரும் அடி வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு அடி வாங்குகின்றனர்.

மிகவும் சுவாரசியமாக ஆவி, மறுபிறப்பு சமாச்சாரங்களை கையாண்டிருக்கின்றார் சுஜாதா. அவரைப்போன்ற அறிவியல் ஆசாமிகள் இதை நம்பினால் அவரது நம்பகத்தன்மை என்ன ஆகுமென்று அனைவருக்கும் தெரியும். அதற்கேற்றார்போல் இந்த நாவலில் அவரது பாணியில் கதையை நகற்றிச்சென்றுள்ளார்.

முதல்நாள் இரவு படிக்கத்துவங்கி லேசாக பயந்து பின் இரவு முடிந்தவரை தொடர்ந்தேன். உண்மையாகவே இந்த நாவல் லேசாக பயமுறுத்துகின்றது.

ஒரு கிராமத்தில் உள்ள பூர்வீகநிலத்தை விற்க உதவ வரும் கணேஷ், வசந்த் அந்த நிலத்தில் உள்ள வில்லங்கங்களை லேசாக கிளற, அந்த நிலத்தின் சொந்தக்காரியாக இருக்கப்போகிற ஒரு மைனர் பெண்ணால் அவளைச்சுற்றி கொலைகள் நடக்க, அதற்கு பூர்வஜென்ம ஆவிகள் துணைபோவதாக ஒட்டுமொத்த கிராமமும் நம்புகின்றது. இதை கணேஷ், வசந்த் அறிவியல் மற்றும் மூடநம்பிக்கை உதவியுடன் அணுகி அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவதுதான் கதை.

நல்ல அருமையான விறுவிறுப்பான நாவல். படித்துப்பாருங்கள்
நிறைய அறிவியல் தகவல்களை அந்தகாலத்திலேயே எழுதி கலக்கியிருக்கிறார் வாத்தியார்.

தமிழில் உள்ள வழக்கொழிந்த சொற்களை எழுதச்சொன்னார் ஜோதிபாரதி. நண்பரின் விருப்பத்திற்கிணங்க அதை சற்று அலசலாம் என்று எண்ணுகின்றேன்.

எனது 24 வருடங்களுக்குள் வழக்கொழிந்துபோன வார்த்தைகளை தேடுவதென்பது சற்று கடினம்தான். ஏனென்றால் என்னை அறியாமல் நானும் அந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டிருப்பேன்.

நான் பிறந்தது மட்டும் தஞ்சை மாவட்டம், வளர்ந்தது கடலூர் மாவட்டம். அடிக்கடி தஞ்சையும் சென்று வருவதால் இயல்பிலேயே எனக்கு சில குழப்பங்கள் உண்டு. சிறு வயதுவரை ஆத்தா என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த நான் கடலூரின் ஆதிக்கத்தால், ஆயா என்று கூப்பிட ஆரம்பித்தேன். இதில் என் ஆத்தாவுக்கு வருத்தம்தான்.

அதேபோல் மன்னார்குடியில் வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டிருந்த நான் கடலூர் வந்து மல்லாட்டை சாப்பிடும்படி ஆனது. மல்லாட்டை என்பது மணிலாக்கொட்டையில் இருந்து வந்தது என்பது பலருக்கு தெரிந்திருக்கும். தமிழின் தேய்வு குழந்தையில் இருந்தே தொடங்குகின்றது. எப்போது அம்மா அப்பாவுக்கு பதிலாக மம்மி டாடி வருகின்றதே, அப்போதே குழந்தைகளுக்கு தமிழ் மீதுள்ள ஆர்வம் குறைய ஆரம்பிக்கின்றது. இந்த சமயத்தில் நான் குழந்தையாக இருந்தபோது பக்கத்து வீட்டில் இருந்த ஆங்கிலோஇண்டியன் குடும்பத்தில் இருந்த சின்ன பையனை கன்னாபின்னாவென்று கண்டிக்கிறேன். அந்தப்பயலால் தான் நான் மம்மி டாடி என்று கூப்பிடுகின்றேன்.

அதேபோல் வீட்டுக்குள்ற இருந்து மன்னிக்கவும் மீண்டும் கடலூர் தலைகாட்டுகின்றது. வீட்டுக்குள் இருந்துதான் தமிழ் வாழவும் வளரவும் முடியும், தெருவோரக்கூட்டங்களிலோ அல்லது திரைப்படப்பெயர்களிலோ அல்ல.

விளையாட்டினால் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. உதாரணமாக, பந்து என்ற வார்த்தை கிட்டத்தட்ட மறைந்து அதை ’bபால்’ முற்றிலுமாக ஈடுகட்டிக்கொண்டிருக்கின்றது. எனக்கு தெரிந்து நாய்த்தோல்பந்து என்று டென்னிஸ் பந்தை அழைத்திருக்கின்றேன்.

பள்ளியில் மணியடிக்கப்போகுதுடா ஓடுடா, என்ற என் பள்ளியில் நான் கூறிக்கொண்டிருந்த இடத்தில் இப்போது மணிக்கு பதில் பெல்.

காலைசாப்பாடு, மதியசாப்பாடு, இரவுசாப்பாட்டை எல்லாம் ஆங்கிலம் உண்டு செரித்து பல காலமாகிவிட்டன‌.

அசதி என்ற வார்த்தை ஓய்வெடுக்கப்போய் அங்கும் ஆங்கிலம் டய‌ர்டாகாமல் இருக்கின்றது.

இப்படி எனக்கு தெரிந்த அளவில் தமிழில் வார்த்தைகள் அங்கங்கு வழக்கொழிந்துகொண்டு செல்கின்றது.

ஒரு முழு வாக்கியத்தை பிறமொழிக்கலப்பின்றி எழுதவே இங்கு பலருக்கு இயலவில்லை என்ற விஷயம், டால்மியாபுரத்தில் ரயிலில் தலைவைத்ததன் நோக்கம் இன்று எந்த அளவில் நிறைவேறி இருக்கின்றது என்பதை தெளிவாகக்காட்டுகின்றது.

வேளாங்கன்னியில் பழைய மாதாகோவிலுக்கு செல்லும் வழியில் ஒரு கடையில், கு
ம்பி, பனிக்குழைவு என்றெல்லாம் எழுதி இருந்தது அவ்வளவு இனிதாக இருக்கும்.

தமிழை நாம் வளர்ப்பதை விட, நாம் தமிழில் வளர்வதைப்பற்றி சிந்திப்பதுதான் நம்மால் இயன்ற காரியம்.

முதலில் குழந்தைகளை தயவு செய்து தமிழ்வழிக்கல்வியில் சேர்த்து விடுங்கள்.

தமிழ்வழியில் படித்தால் ஆங்கிலம் வராது என்பதெல்லாம் சுத்தமுட்டாள்தனமான பேச்சு. அதை நம்பாதீர்கள். தமிழ்வழியில் படித்தால்தான் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். புரிந்து படிக்கும்போது, இப்போதும் பள்ளியில் படித்த பரப்பு இழுவிசை, கல்லூரியில் படித்த Surface Tension-விட நன்கு புரிந்துள்ளது தெரிகின்றது.

என் அம்மா, எப்போதும் புத்தகம் படிப்பார், சாப்பிடும்போதுகூட, அவரிடம் இருந்து பற்றிக்கொண்ட இந்த படிக்கும் வழக்கம், என்னை 6வது படிப்பதற்குள் ஆனந்த விகடன் முதலிய புத்தகங்களை வாசிக்க வைத்தது. எனவே நல்ல தமிழ் புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

நீங்கள் படிக்கக்கூட வேண்டாம், சும்மா வைத்திருங்கள் படிப்பது போல், அது குழந்தைகளை பெரிதும் படிக்கும் பழக்கத்திற்கு ஊக்குவிக்கும்.

நிறைய படியுங்கள், முடிந்தவரை தமிழில் பேசுங்கள்.



Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.