இதை இலங்கை அரசு பிரத்தியேகமாக இந்திய அரசியல்வாதிகளுக்காக பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்தனுப்பி உள்ளது. இது இந்த சமயத்தில் நம் அரசியல்வாதிகளுக்கு நல்ல உபயோகமாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஈடாக சில பல பீரங்கிகளும் பரிமாற்றப்பட்டுள்ளன.

இது தான் அந்த பரிசு.


இந்தோ இந்த படத்தில் இருப்பது தான் ஒருவகை ஃபிடில்.



இலங்கையில் தமிழர்கள் எரிந்துகொண்டிருக்கும்போது, அவர்களது சதை பொசுங்கும் சமயத்தில் இதை வாசியுங்கள்.

வரலாறு திருத்தி எழுதப்படும். இலங்கை தமிழர்கள் எரிந்த போது பிடில் வாசித்தது இந்திய அரசாங்கம் என்று.

இந்த வீடியோவை மென்மனதுக்காரர்கள் பார்க்கவேண்டாம்.







ஆபரேஷன் என்டெபி

ஜூன் 27, 1976ல் இஸ்ரேலில் இருந்து ஏதென்ஸ் வழியாக சென்றுகொண்டிருந்த பாரிஸ் சென்றுகொண்டிருந்த ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தை 2 பாலஸ்தீனிய தீவிரவாதிகள் உகாண்டாவிற்கு ஒரு போண்டா போல் கடத்திச்சென்றனர். அதை இஸ்ரேல் சமாளித்தவிதம் ஒரு த்ரில்லர் திரைப்படத்திற்கு இணையானது. இந்த சமயத்தில் இதை பதிவது காஸா விஷயத்தில் இஸ்ரேலுக்கு மல்லுக்கட்டுவது போல் ஆகிவிடக்கூடும் தான் இருந்தாலும். எல்லாவற்றையும் மக்கள் எப்போதும் மறந்துவிடுபவர்கள் என்பதால் தொடர்கிறேன்

ஏர் ஃப்ரான்ஸ் 139 விமானம் இஸ்ரேலில் இருந்து ஜூன் 27, 1976ல் பாரிஸ் கிளம்பியது. 246 பயணிகளும் 13 விமானக்குழுவும் இருந்த அந்த விமானம் இஸ்ரேலில் இருந்து கிளம்பியதும் கடத்தப்பட்டது. இந்தியா என்றால் பாகிஸ்தான் என்பது போல், இஸ்ரேல் என்றால் பாலஸ்தீனர்கள். இந்த விமானத்தை கடத்தியதும் 2 பாலஸ்தீனர்கள் மற்றும் 2 ஜெர்மானியர்கள் அடங்கிய ஒரு குழு. இந்த கடத்தலுக்கு உகாண்டா அதிபர் இடி அமின் உடந்தையாக இருந்திருக்கிறார்.

கடத்திய விமானம் முதலில் லிபியா கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுமார் 7 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. லிபியாவில் விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பி உகாண்டா செல்ல ஆயத்தமானது விமானம். இதற்கிடையில் ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதாகவும் அது கலைந்துவிட்டதாகவும் கூறி லிபியாவிலேயே இறங்கி தப்பித்ததும் நடந்தது.

பின் உகாண்டா சென்று சேர்ந்தது ஏர் ஃப்ரான்ஸ் விமானம். பிறகுதான் கட்த்திய தீவிரவாதிகள் தங்கள் வேலையைக் காட்டத்துவங்கினர். எதிர்பார்த்தபடி பணயத்தை அறிவித்தார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட நடக்க இயலா விஷயமாகவே இருந்தது. அவர்கள் கேட்டது.

  • இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40 பாலஸ்தீனர்களை விடுவித்தல்
  • கென்யா, ஃப்ரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 13 தீவிரவாதிகளி விடுவிப்பது

இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாவிடில், ஜூலை 1 முதல் பயணிகளை கொன்றுவிடப்போவதாக அறிவித்தனர். இடையில் உள்ள நாட்கள் 3. ஆனால் இதில் எதிர்பார்க்காத மற்றொரு முகத்தையும் காட்டினர் கடத்திய தீவிரவாதிகள். யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் தனியாக பிரித்தனர். இது ஒன்றே போதுமானதாய் இருந்தது, கடத்தப்பட்டவர்களின் திகிலூட்ட‌.

ஒரு வழியாக பயணிகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டனர். ஆனால் யூதரல்லாதவர்களையும் விமானக்குழிவையும் மட்டும். என்டெபியில் இதற்கென தயாராக இருந்த மற்றொரு ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தில் இவர்களை ஏற்றிச்செல்ல முடிவெடுத்தனர். விமானததின் கேப்டன் மைக்கேல் பகோஸ், "இந்த விமானத்தின் அனைத்து பயணிகளும் என் பொறுப்பு. அவர்களின்றி நான் செல்ல மாட்டேன்" என்றார். மற்ற விமானக்குழுவினரும் இதை ஆமோதித்தனர். ஒரு ஃப்ரெஞ்சு கிறிஸ்தவ கன்னிகாஸ்திரியும் செல்ல மறுத்து தனக்கு பதிலாக வேரொறுவரை வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் உகாண்டா வீரர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இப்போது விமானத்தில் இருந்தது 80 யூதப்பயணிகளும் 20 மற்றவர்களும்.

இதற்கிடையில் நம்மூரைப்போல் செயற்குழு, பொதுக்குழு, பிரதமருக்கு தந்தி, ஜனாதிபதிக்கு கடிதம் ஏதும் இல்லாமல், இஸ்ரேல் அரசு வேறொரு வேலையில் மும்முரமாக இருந்தது. ஜூலை 1ம் தேதி நெருங்கிவிட்டதால், இஸ்ரேல் அரசு இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்டது. அதாவது ஜூலை 4 வரை ஒத்திவைக்குமாறும், தாங்கள் பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் கூறியது. இந்த நேரத்தில் உகாண்டா அதிபர் இடி அமினும் ஒரு அரசுமுறைப்பயணமாக மொரீஷியஸ் வரை செல்ல வேண்டி இருந்ததால் அவர், அந்த தீவிரவாதிகளை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டார். கிடைத்த இந்த 3 நாட்களை கொண்டு ஒரு ஆபத்தான திட்டத்தில் இறங்கியது இஸ்ரேல்.

இஸ்ரேல் ராணுவத்தின் Yekutiel "Kuti" Adam, Matan Vilnai, ,Brigadier General Dan Shomron அடங்கிய படை ஒன்று திரட்டப்பட்டது. அந்த படை தீட்டிய திட்டம் ஆபரேஷன் என்டெபி. திட்டம் என்னவென்றால் இஸ்ரேல் ராணுவ விமானங்கள் திருட்டுத்தனமாக உகாண்டாவின் என்டெபிக்குள் நுழைந்து பணயக்கைதிகளை காப்பாற்றுவது. இது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒரு விஷயம். ஏனென்றால் இஸ்ரேலுக்கு கிடைத்த உதவிகள் அப்படி.

  • இஸ்ரேல் தனக்கு அருகாமையில் இருக்கும் அனைத்து நாடுகளுடனும் சண்டையில் இருந்தது. நல்ல காலத்திலேயே அண்டை நாடுகள் எப்போதும் உதவுவதில்லை. இதில் பிரச்சினையில் இருக்கும்போது கேட்கவே வேண்டாம்.
  • எனவே இஸ்ரேலின் முதல் சவால், அண்டை நாடுகளின் வானத்தை விமானப்பயன்பாட்டுக்கு உபயோகிக்காமல் இருக்கவேண்டும்.
  • அவ்வளவு தூரம் சென்று மீண்டும் இஸ்ரேல் திரும்ப எரிபொருள் கட்டாயம் பத்தாது. எந்த நாடும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்காது. மேலும் இந்த ஆபரேஷன் ஒரு மிக ரகசியமான ஒரு விஷயம்.
  • என்டெபியில் விமான ஓடுதளத்தை அவர்கள் உதவியின்று பயன்படுத்த வேண்டும். என்டெபி விமானநிலையம் ராணுவத்தால் பாதுகாக்கப்பட்டதால் இதுவும் அவ்வளவு எளிதல்ல.

இத்தனை சவால்களையும் மீறி விமானநிலையத்துக்குள் நுழைந்தாலும், அவர்களை எப்படி தேடுவார்கள் என்கிறீர்களா? அங்குதான் இருந்தது ஒரு அல்வாத்துண்டு போன்ற ஒரு விஷயம். உகாண்டாவின் என்டெபி விமான நிலையத்தை வடிவமைத்து கட்டியது ஒரு இஸ்ரேலிய கம்பெனி. இது போதுமே, அனைத்தையும் முடிக்க. கிட்டத்தட்ட அந்த கம்பெனியிடம் இருந்து வடிவமைப்பைப் பெற்றுத்தான் இந்த திட்டமே தீட்டப்பட்டது எனலாம். அந்த வடிவமைப்பைக்கொண்டு இஸ்ரேலில் ஒரு மாதிரி அமைத்து அங்கு ஒரு சோதனை செய்து பின்னரே களத்திற்கு கிளம்பினர்.

முதல்கட்டமாக அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை, கிட்டத்தட்ட 100 அடிக்குள்ளான உயரத்தில் செங்கடல் வழியாக எகிப்து, சூடான் மற்றும் சவுதி அரேபியாவின் ரேடார் பார்வையில் இருந்து தப்பித்தது. பின் செங்கடல் இறுதியில் வலதுபுறம் திரும்பி ஏடென் வழியாக கென்யாவின் நெய்ரோபி விமானநிலையத்தை வந்தடைந்தன இஸ்ரேலிய ராணுவ விமானங்கள். அங்கிருந்து விமானங்கள் நேரடியாக என்டெபியை நோக்கி புறப்பட்டன.

என்டெபியில் கடைசியாக ஒரு மெகா நாடகத்தை நடத்தியது. என்டெபியில் முதலில் ஒரு விமானத்தை தரை இறக்கியது. சற்று முன் தரை இறங்கிய வேறு ஒரு விமானத்திற்காக போடப்பட்ட ஓடுபாதை விளக்குகளை பயன்படுத்தி இஸ்ரேலிய விமானம் இறங்கியது.

மொரீஷியஸ் சென்றிருந்த இடி அமின் வந்துவிட்டதைப்போல் தோற்றப்படுத்த, அவர் எப்போதும் பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடிஸ் கார் ஒன்று விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்டிருந்தது. அந்த காரை விமானத்தில் இருந்து தரை இறக்கி, அதில் இடி அமின் போல தோற்றம் கொண்ட ஒரு இஸ்ரேலிய கமாண்டோவை இருக்க வைத்து, பின்னால் சில கார்கள் புடைசூழ விமான நிலையத்தில் நுழைந்தது கார். உள்ளே இருந்த ராணுவம் இடி அமின் வருவதாக நினைக்க வைக்கவும், அவர்களுக்கு சுதாரிக்க நேரம் கொடுக்காமலும் இருக்க இந்த நடவடிக்கையை செய்தது இஸ்ரேல்.

ஆனால் விதி வேறு விதமாய் இரண்டு பாதுகாவலர்கள் ரூபத்தில் காத்திருந்தது. இஸ்ரேல் எடுத்து வந்திருந்தது கருப்பு நிற கார். ஆனால் மிக சமீபத்தில் இடி அமின் தனது காரை வெள்ளையாக மாற்றி இருந்தார். மேலும் தன் காருக்கு பின்னால் கார்கள் ஏதும் வரவேண்டாம் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதை நன்கு அறிந்த அந்த பாதுகாவலர்கள், வந்த காரை நோக்கிச்சுட்டனர்.

இது மற்றவர்களை உசுப்பிவிடாமல் இருக்கும் பொருட்டு, இஸ்ரேல் ராணுவம் உடனடியாக களத்தில் இறங்கியது. அவர்கள் முன்னரே போட்டு வைத்திருந்த திட்டப்படி அனைவரையும் அடித்து நொறுக்கி 30 நிமிடங்களில் அனைத்து பணயக்கைதிகளையும் காப்பாற்றி, விமானம் மீண்டும் கிளம்பி இஸ்ரேல் சென்றது. வழியில் முன்புபோல் கென்யாவில் இரு நிறுத்தம் போட்டுவிட்டு சென்றது.

இந்த மீட்புப்பணியில் ஒரே ஒரு இஸ்ரேலிய கமாண்டோ மட்டும் உயிரிழந்தார். பணயக்கைதிகளில் 3 பேர் இறந்தனர்.

உகாண்டா தரப்பில் 45 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் 15 மிக் 17 ரக விமானங்களும் வீழ்த்தப்பட்டன.

பின்னர், இந்த கடத்தல் சம்பவத்தில் இஸ்ரேலின் உளவு அமைப்பும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஒரு வதந்தியை பிரிட்டன் கிளப்பியது. ஆனால் இஸ்ரேல் அதை மறுத்தது.

இந்த சம்பவம் கமாண்டோ படைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக காண்பிக்கப்படுகின்றது.

இவ்வளவு தூரம் படிச்சதுக்கு நன்றி. கீழே உள்ள சுட்டிகள் மூலம் தான் இந்த விஷயங்களை நான் தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்களுக்கும் நன்றிகள்

http://www.ynet.co.il/english/articles/0,7340,L-3269662,00.html
http://en.wikipedia.org/wiki/Operation_Entebbe
http://www.palestinefacts.org/pf_1967to1991_entebbe.php
http://www.youtube.com/watch?v=ffRQ6e29Dw0 and the following serious

மிஷன் சக்ஸஸ் தமிழர்கள் கூண்டோடு அழிந்தனர்.

இந்த செய்தியைத்தானே எதிர்பார்க்கிறது இந்திய அரசு.

தஜகிஸ்தானில் இந்திய ராணுவநிலை வைக்க முடிகிறது, ஆப்கன் போருக்கு மருந்தளிக்க முடிகிறது. இங்கு கூப்பிடு தூரத்தில் நிகழும் இனஒழிப்பை கைதட்டி ரசிக்கிறது.

தமிழக அரசு என்னவென்றால் தீர்மானங்களும், கடிதங்களும் போட்டுக்கொண்டிருக்கிறது.

கீழ்வரும் நன்மைகளை நினைத்தாவது திமுக, தன் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்யவேண்டும்

  • இலங்கையில் தமிழர்கள் உயிருடன் இருந்தால்,
  • சன்டிவி கேடிவி பார்ப்பார்கள். காசு கிடைக்கும்.
  • கப்பல் தொழிலுக்கு உதவுவார்கள்
  • தமிழகத்தில் உங்களுக்கு ஓட்டு அரசியலுக்கு வசதியாக இருக்கும்
  • கண்டிப்பாக மனிதநேயம் கொண்டவர்களால் ஓட்டு எண்ணிக்கை அதிகரிக்கும்
  • கவிதை எழுதினால் அதை ஈழத்தமிழர்கள்(மட்டுமாவது) ரசிப்பார்கள், பாராட்டுவார்கள்.
  • குடும்பத்தோடு சுற்றுலா செல்ல நல்ல இடம் கிடைக்கும்

என்ன எல்லாம் கேணைத்தனமா இருக்கா? நம் அரசு செய்வதைவிடவா?

ஈழத்தமிழர் விஷயத்தில் எனக்கு இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை, இது தொடர விருப்பம் இல்லை. எனவே இந்த தேர்தலில் என் வோட்டு மட்டுமல்லாது என்னை சார்ந்திருக்கும் சில ஓட்டுகளையும் இந்த அரசு இழக்கிறது.

நீங்களும் இதே மனப்பான்மையோடு இருந்தால், தயவுசெய்து வலப்பக்கம் இருக்கும் பட்டையில் ஓட்டளியுங்கள்.
உங்கள் ஓட்டு இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கட்டும் ஈழத்தமிழர் விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் வரை.

இந்த ஓட்டு உங்களுக்கு புலி ஆதரவாளர் என்ற முத்திரை குத்தாது. நம் இனம் அழிகின்றதே என்ற வேதனையை பதிவு செய்யும்.

இந்த ஓட்டு உங்களை மற்ற கட்சி ஆதரவாளர்களாக்காது. மாற்றாக ஆளுங்கட்சிகளுக்கு உங்கள் ஓட்டு வலிமையை உணர்த்தும்.

நம் கருத்துக்களை அரசுக்கு சொல்ல ஒரே வழி, அவர்கள் மொழியில் பேசுவதுதான். பணக்காரனிடம் பணம் பற்றி பேச வேண்டும். அரசியல்வாதிகளிடம்(தேர்தல் சமயத்தில்) ஓட்டு பற்றி பேச வேண்டும்

அதிகம் கணினியில் வேலை செய்வதை விட, கணினியில் படிப்பது கண்ணை மிக சோர்வாக்கும்.

எனக்கு கடந்த சில நாட்களாக கண் எரிச்சல் உண்டாகி ஃபிகர்கள் சரியாக தெரியாமல் போய் சிரமப்பட்டு வருகின்றேன்.

இருந்தாலும் எப்படியும் படித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் தேடிய போது கிடைத்தது இந்த ஃபயர்ஃபாக்ஸ் ஆட் ஆன்.

எந்த நிறத்தில் திரை இருந்தாலும் அதை ஒரே சொடுக்கில் கருப்பு பின்புலமாகவும், வெண்ணிற எழுத்து நிறமாகவும் மாற்றி எளிதில் படிக்க வழி செய்கிறது. இந்த அமைப்பை நம்மால் மாற்றிக்கொள்ளவும் இயல்கிறது

ஆனால் இது செயல்பாட்டில் உள்ள போது சில இடங்களில் தட்டச்சுவது சிரமமாக இருக்க வாய்ப்புள்ளது.

எனினும், சிறந்த ஒரு ஆட் ஆன்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/7166

தமிழில் அறிவியல் பற்றி ஏற்கனவே சில தளங்கள் இருந்தாலும், அவை கொஞ்ச நாட்களில் ஆர்வமிழந்துவிடுகின்றன. அடிக்கடி அப்டேட் செய்வதில்லை.

இன்று பத்ரி மூலம் கிடைக்கப்பட்ட தளம் http://www.ariviyal.info

ஏற்கனவே அவரது முயற்சிகள்/கணித பதிவுகள் அறிந்ததே. இந்த புது முயற்சியில் அவருடன் வெங்கடரமணன் மற்றும் அருண் ஆகியோரும் எழுதுகின்ற‌னர்.

"அறிவியல் ஒரு சமுத்திரம். அறிவியல் சார்ந்த விஷயங்களில் எங்களுக்கு ஓரளவிற்கு புரிந்தவற்றை உங்களுடன் தமிழில் பகிர்ந்துகொள்ளும் முயற்சி இது." என்று கூறியிருக்கிறார்கள்.

நல்வருகை


வலி

வார்த்தைகள் தொடங்கும் அந்த ஆரம்பப்புள்ளியில் வலிக்கிறது
எனக்கும் சற்று புதிதாகத்தான் இருக்கிறது இந்த வலி.
மருத்துவருக்கு சொல்லி புரியவைப்பதற்குள் மீண்டும் வலிக்கிறது

எல்லாம் ஆரம்பித்தது இந்த வார்த்தைகளை எண்ண ஆரம்பித்ததும்தான்
வார்த்தைகளின் எண்ணிக்கையும் ஒரு வார்த்தையாகி வலியைக்கூட்டுகின்றது
வார்த்தைகளை குறைத்துத்தான் ஆகவேண்டும் போல இருக்கின்றது

எப்படி இருந்தாலும்
வலி என்ற வார்த்தைக்குள் இருந்து துவங்கிவிடும் மீண்டுமொரு வலி


பதிவுலகம் மொக்கைகளால் நிரம்பியிருக்கின்றது என்றால் அது மிகை அல்ல. நானும் அம்மாசுக்கு ஒரு காரணமாக கண்டிப்பாக இருந்திருப்பேன் என்ற குற்ற உணர்வோடு இதை எழுதுகிறேன்.பதிவுகளுக்கு எல்லை இல்லை, எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணத்தோடு தீவிரமான மொக்கைகளோடு சில பதிவுகள்/இடுகைகள் வருகின்றன. கண்டிப்பாக எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்தான். ஆனால் பயன் என்பது முக்கிய அம்சம்.


ஈமெயிலில் சொல்ல வேண்டிய கருத்துக்களை பதிவிட்டு கொண்டு சென்ற நம் அலட்சியம்தான் இன்று ட்விட்டரில் "உங்க வீட்டில் என்ன குழம்பு" என்பது வரை கொணர்ந்துவிட்டிருக்கிறது. பதிவுலகம் கண்டிப்பாக நண்பர்கள் உருவாகும் இடம்தான். ஆனால் இன்று நண்பர்களாக இருந்து கொஞ்ச நாள் கழித்து சண்டை போட்டுக்கொள்வது, பதிவுலக அரசியல் என்று புதிய வார்த்தை வந்தது என்று பல பிரச்சினைகளை உருவாக்கும் இடமாகவும் உள்ளது.


பதிவுகளில் சுய புராணங்கள், பதிவர் பட்டத்திற்கு எழுதுவது போன்றவற்றை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. எழுத்தின் பலம் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். எல்லோராலும் சுஜாதா போல் எழுத முடியாது, எழுதினாலும் படிக்க ஆளிருக்காது. சமூக அக்கறையுடன் இந்த சுதந்திரத்தை பயன்படுத்துவது சிலருக்காவது பலனளிக்கும்.


தயவு செய்து அடிதடிகளை குறைத்துக்கொள்ளுங்கள், எதிர்பதிவுகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்(அதற்கு பதில் ஒரு பின்னூட்டமோ அல்லது மின்மடலோ எழுதிடுங்கள்) இல்லையேல் அது உங்களின் விளம்பரத்தன்மையயே காட்டும். சில விஷயங்கள் இதற்கு விதிவிலக்கு. உதாரணமாக, ஒரு பதிவர் ஒரு தவறான விஷயத்தை பிரசாரம் செய்யும் போது அதை எதிர்த்தி பதிவிடலாம். இதன் மூலம் உண்மை தெரிய வரலாம்.


தனிநபர் தாக்குதல் அறவே வேண்டாம். அதற்கு பல இடங்கள் உள்ளன.


ஏடாகூடமான தலைப்புகள் வேண்டாம். அப்படிதான் நீங்கள் படிக்க வைக்கவேண்டும் என்றால், பிகேபி, கிறுக்கல் போன்ற‌ பதிவுகளை பாருங்கள். எத்தனை வாசகர்கள். அவர்கள் கண்டிப்பாக தலைப்பில் ஈர்க்கப்பட்டு சேர்ந்த கூட்டம் இல்லை.


மேலும் நாம் அனைவரும் எழுதுவது ஒரு சுய அரிப்பை போக்கிக்கொள்ளவும், என்றாவது நம் திறமையும் பேசப்படுமா என்பதற்காகத்தான். அதற்கான முயற்சிகள் மொக்கைப்பதிவுகளால் கண்டிப்பாக வராது.


தமிழ்மணத்தின் சூடான இடுகைகள் பற்றிய விவகாரத்தில் நான் கண்டிப்பாக தமிழ்மணத்தை ஆதரிக்கிறேன்.


அதே போல் தமிழ்மணம் தன் டெம்ப்ளேட்டை மாற்றியபோது, அனைத்து இடுகைகளையும் முழுமையாக முதற்பக்கத்தில் காட்டியது. அது ஒரு நல்ல முடிவு. அதையும் வீணாக எதிர்த்து நிறுத்தினார்கள்.


சற்று யோசித்துப்பார்த்தால், கூகுள் ரீடரில் காட்டுவதைவிடவா தெளிவாக காட்டியது தமிழ்மணம்? அலுவலகங்களில் வலைப்பதிவுகள் பார்க்கவும் கூகுள் ரீடரும் பார்க்க வழியில்லாதவர்களை உங்கள் பதிவு போய் சேர்ந்திருக்கும். அதற்கும் வழியில்லாமல் போனது.


ஆகவே இறுதி வரியை மட்டும் படிக்கும் நண்பர்களுக்கு:உங்கள் பதிவுகள் சற்றாவது பலனளிக்கும் விதத்தில் இருந்தால் நன்று.


இதைச்சொல்ல நீ யாரடா என்று கேட்பவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கட்டும், தங்கள் காதுகளில்...

சாரு பற்றி யார் எனக்கு அறிமுகப்படுத்தியது என்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் எதேச்சையாக கூகுளில் சிக்கியதாக நினைவு. படிக்க ஆரம்பித்ததும் மிகவும் பிடித்துப்போய் தீவிரமாக படிக்கத்துவங்கினேன். ஏனென்றால் அதில் அப்படி ஒன்றும் கடினமானதாகவோ, உண்ர்வை பாதிக்கும் புனைவோ இல்லை. வெறும், மேலோட்டமான சற்று ஆர்வமான பத்திகளே. அதுவும் செக்ஸ் பற்றி வரும் பகுதிகள் யாருக்குத்தான் பிடிக்காது.

சாரு எழுதுவதில் பெரும்பான்மை தன்னை சுற்றி நடப்பதாக எழுதுகிறார். அவை புனைவும் உண்மையும் கலந்தவை என்கிறார். இதி புனைவு என்று நிறுவ, பெருமாள் தன் மனைவியிடம் மாட்டியதும் வரும் பகுதிகள், வெறும் வறட்டு புனைவாக இருந்ததை அறியலாம். தன்னை சுற்றி நிலவிய கதாபாத்திரங்களை பற்றி ஒன்றொன்றாக கதை அளக்கத்துவங்கியது ஒரு அறிகுறி. உச்சகட்டமாக தன்னைக்கொல்ல ஒரு கதாபாத்திரம் துப்பாக்கியை இன்டென்ஷனலாக வைத்துவிட்டு சென்றது காமெடியின் உச்சகட்டம்.

சாருவின் மேற்கோள்கள் பற்றி ஒரு ஆய்வே நடத்தலாம். அவரைப்பொறுத்தவரை அவரது விருப்ப எழுத்துலகம் ஸ்பானிஷ், ஃப்ரெஞ்சு, கூபா போன்ற சில நாடுகளைச்சுற்றியே இருக்கின்றன. சில பல தமிழ் எழுத்தாளர்களும் அவரை பாதித்திருப்பது தமிழுக்கு கிடைத்த மதிப்பு.

சாருவின் சில தபாலக கதைகள் ருஷ்ய சிறுகதைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கின்றன. ஆனால் அதிகம் பயன்படுத்தாமல் வேறு சில இடங்களில் அதை விரயம் செய்கிறார். அதைத்தவிர்த்து அவரது மிகப்பெரிய பிரச்சினை, ஒரு எழுத்தாளனுக்கு புனைவுக்கு கற்பனை இருக்கவேண்டும் அது சாருவிடம் இல்லை.. ஒரு பெண்ணைப்போல் அவரிடம் ஒரு 1 மாதம் சாட் செய்தால் அவரது அடுத்த புத்தகத்திற்கு மனுஷ்யபுத்திரன் தயாராகலாம். கற்பனை இல்லாவிடில், ஆழ்ந்து கவனிப்பு வேண்டும். அவரது கவனிப்புகள் வெறும் 5ஸ்டார் பார்களுக்குள்ளேயும், சில செக்ஸ் விஷயங்களிலுமே இருக்கின்றது(இந்த விஷயத்தில் யாரும் விதிவிலக்கல்ல. மேலும் அவரது படைப்புலகம் அவரது கம்ஃபர்ட் ஸோனுக்குள் மட்டுமே இருக்கின்றது. இந்த விஷயம், வரலாற்றில் அவருக்கான இடத்தில் வேறொருவர் துண்டு போட்டுவிடும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது.

அவரது எழுத்தில் மகுடியாக மயங்கும் அளவிற்கு சிலர் பேசுவது, அவர்களது ரசனையையும், மற்ற எழுத்தாளர்களை கேலிக்குள்ளாக்குவதாகவும் உள்ளது.

சாருவின் சில உலகப்படங்கள் மற்றும் இசை பற்றிய எழுத்துகள் எல்லாம் ஏதோ மொழிபெயர்ப்பு போல இருக்கின்றது. இசையோ படைப்போ ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் சாரு எழுதும்போது ஒருவித அந்த விஷயம் விடுபட்டுப்போகின்றதாக நான் உணர்கின்றேன்.

சாருவின் கதாபாத்திரங்களை ஏணி மீது ஏற்றுவதும், கொஞ்சம் சறுக்கினால், கீழே போட்டு மிதிப்பதுமாய் உள்ள மனபாவம் எரிச்சலை ஏற்படுத்துகின்றது. கேரளாவில் அவரது புகழ் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கின்றார். அங்கு அவரை எப்படி கருதுகிறார்கள் என்பது பற்றிய ஜெயமோகனின் மதிப்பீடு உண்மையாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவின் கார் தாக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது,

இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், தாக்கியவர்கள் கண்டிப்பாக வழிப்பறி செய்பவ்ர்களாக இருக்கமாட்டார்கள். கண்டிப்பாக ஏதேனும் ஒரு கட்சியை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

என்னங்கடா மனசுல நெனச்சிகிட்டு இருக்கீங்க?

ஒரு கட்சி, எம்.எல்.ஏ பதவி இதெல்லாம் மக்களுக்கு சேவை செய்யறதுக்காக இருக்கணும் அத விட்டுட்டு ஏதோ காண்ட்ராக்ட் பிசினஸ் மாதிரி பண்ரதுக்கு, நீங்கள்ளாம் ___________ பொழைக்கலாம்.

மக்களுக்கு சேவை செய்யறதுக்கு இவ்வளவு அடிச்சுக்கறீங்களே ரொம்ப பெருமையா இருக்கு.

போலீஸ் என்ன செய்யுதுனு தெரியல, சம்பவத்தின் புகார் கூட எடுக்க மறுத்துவிட்டார்களாம்.

அமைச்சர்கள் இரண்டு வாரமாக இங்கு தங்கி ஓட்டு சேகரித்துவருகின்றனராம். உங்களை அமைச்சராக்கி அழகு பார்த்தத்ற்கு நல்ல முக்கியமான காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நன்றிகள் பல.

கவிதை மட்டுமே எழுதும், தமிழினத்தலைவருக்கு குறிப்பிட்ட திசையில் இருந்து வரும் செய்திகள் கண்ணுக்கு தெரிவதில்லையாம், காதில் விழுவதில்லையாம். அவருக்கு உடல்நிலை குணமாக இறைவனை மனமாற ப்ரார்த்திக்கிறேன்.

சில கட்சிகள் செய்யும் வன்முறையை பார்த்தும், அவர்களுக்கு ஓட்டு போடும் மக்களை 24 மணி நேரமும் மின் தடை செய்தாலும் தப்பில்லை.

வாழ்க ஜனநாயகம்



Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.