"சிக்னல் வந்துருக்கு லேன்கோ", கத்திக்கொண்டு வருகின்றான் தூர்.

பல ஆண்டுகளுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரேடியோ அலைகளுக்கு பதில் வந்திருக்கின்றது.

தூரும் லேன்கோவும் வளர்ந்துவரும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் அலுவலகத்தில் லேன்கோவின் உதவியாளனாக வேலை செய்கிறான் தூர்.

"என்னால நம்பவே முடியல தூர், பணத்த விரயம் பண்ணின ஆராய்ச்சிக்கு இப்போ பலன் கிடைச்சிருக்கா?"

"இருக்கலாம். ஆனா இதை decipher செய்ய இன்னும் எவ்வளவு காலம் ஆகும்னு தெரியலயே"

"ஏற்கனவே funds நிறுத்தப்போறதா சொல்லிருக்குற நேரத்துல இது கண்டிப்பா நல்ல செய்தி தான் தூர்"

"சரி இப்போ அடுத்த ஸ்டெப் என்ன?"

"நாமளே decipher பண்ணி பார்க்கலாம். நல்ல இன்ஃபர்மேஷன் கிடைச்சா வேலைய ரிஸைன் பண்ணிட்டு NASA ல போய் ஜாய்ன் பண்ணிடலாம்"

"இல்லைனா?"

"இல்லைனா, வெறும் ரேடியோ நாய்ஸா இருக்கும், ப்ரஸ்மீட்டுக்கு சொல்லிவிடுவோம். புகழ், சூப்பர் போதை"

"லேன்கோ இவ்வளவு தூரம் பேச விட்டது தப்பு, நானும் உனக்கு குறைந்தவன் இல்லை. வா decipher பண்ண ஆரம்பிக்கலாம்."

"எங்க இருந்து ஆரம்பிக்கலாம் தூர்?"

"ஒரு ரேடியோ ரிசீவர்ல போட்டு கேட்டுப்பார்க்கலாம்"

"தூர், உன் பேருக்கேற்ற மாதிரி தூரத்துலதான்டா இருக்க. அந்த சிக்னல ப்ராசசர்ல கொடு. waveform பார்க்கலாம்"

"லேன்கோ, இது வெறும் மாடுலேட்டட் ரேடியோ வேவ்ஸ் மாதிரி இருக்கு"

அறைக்கதவை தள்ளிக்கொண்டு வருகிறாள் தரி.

தரியும் இவர்களுடன் வேலை செய்யும் பெண். விண்வெளியையும் சமயத்தில் லேன்கோவையும் ஆராய்ச்சி செய்பவள்

"என்ன நடக்குது இங்க? கொஞ்சம் நேரம் நிம்மதியா நியூஸ் கேக்க விடுறீங்களா? கேணத்தனமா ரேடியோ ஃப்ரீக்வென்சில உளறிக்கிட்டு இருக்கீங்க‌"

தூரும் லேன்கோவும் தங்களை ஒருவர் ஒருவர் பார்த்துக்கொண்டு தரியிடம் நடந்ததை விளக்குகின்றனர்.
மூவரும் ஆர்வத்துடன் சிக்னல் ப்ராசசரின் ரேடியோ டீமாடுலேட்டரில் கேட்கிறார்கள்.

"வணக்கம். வேறு கிரகத்தில் இருக்கும் உங்களுக்கு எங்கள் மொழியில் செய்தி அனுப்புவது சிறுபிள்ளைத்தனமானது. இருந்தாலும் சில சமயங்களில் பல கடின விஷயங்களின் விடை மிகச்சுலபமானதாக இருக்கும் என்ற சித்தாந்தத்தின் நம்பிக்கையில் இதை அனுப்புகின்றோம்

இடம்: உலகம், சூரியக்குடும்பத்தின் சச்சரவுப்பிள்ளை
நாள்: அழிவிற்கு சில காலம் முன் அதாவது எங்கள் மத கணக்குப்படி கி.பி. 2045 அறிவியல் கணக்குப்படி 50 கோடியே 45 லட்சத்து 35ம் வருடம்

நான் இளங்கோ என்னுடன் என் நண்பன், அலுவலக பதிவின்படி உதவியாளன் பகதூர், என் அறிவியல் காதலி சுந்தரி.
மனிதர்கள் என்று எங்களை நாங்களே அழைத்துக்கொள்ளும் நாங்கள், நாங்கள் வசிக்கும் உலகத்தை எங்கள் பசிக்கு உணவாக்கிக்கொண்டோம்.
இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றோம். ஆகவேதான் நாங்கள் இருந்தோம் என்பதற்கான கடைசி அத்தாட்சியாய், எங்களால் உருவாக்கப்பட்ட அழியா அலையில் இத்தகவலை அனுப்புகின்றோம்.
இதைத்தொடர்வது எங்களைப்பற்றிய தகவல்கள்........
.....
......
இறுதியாக,
தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும் என்று கண்டறிந்த எங்களாலேயே தப்பிப்பிழைக்க முடியவில்லை.
உங்கள் தகுதியை காப்பாற்றிக்கொள்ளுங்கள்"

"தூர் இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?"

"ஆச்சர்யமாக இருக்கிறது என்பது கிளிஷேவான வார்த்தைதான் இருந்தாலும் இச்சமயத்திற்கு பொருந்துகின்றது"

"என்ன லேன்கோ என்ன ஆச்சு உன் NASA ப்ளான்?"

"இல்லடா, NASA கிரகத்திற்கு போறதவிட நம்ம ல‌கம் கிரகத்தை காப்பாற்றியாகணும்"

"என்ன சொல்ற
லேன்கோ? புரியல..‌"

"என்ன தூர், இன்னுமா லேன்கோ சொல்றது புரியல? இது நம்மளோட 2040வது வ‌ருடம். இப்போ நாம சிக்னல்ல கேட்ட உலகம்ங்கர கிரகத்துக்கும் நம்ம லகம் கிரகத்துக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. கிட்டத்தட்ட அந்த கிரகத்தோட பிரதிபலிப்பு மாதிரி தான் நம்ம கிரகம். அடுத்த 5 வருடங்கள் நம்மோட கடைசி வருடங்களா இருக்கலாம்"

"இப்போ புரியுது லேன்கோ, இந்த கிரகம் ஏன் நம்ம கண்ல படலைனு. இந்த கிரகமே இப்போது இல்லை", என்றான் தூர்.

"கரெக்ட். இந்த சிக்னல் ரொம்ப காலம் முன்னாடி நமக்கு அனுப்பிருக்காங்க. ஸாரி, நமக்குனு சொல்லமுடியாது, அனுப்பிருக்காங்க. இந்த விஷயத்தை எப்படியாவது நம்ம லக மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்துடணும். நம்மை காப்பாற்றிக்கணும்
தரி" என்றான் லேன்கோ.

"கண்டிப்பா" என்றாள் தரி.

அவரவர் வழியில் யோசித்துக்கொண்டே செல்ல‌ அந்த ரேடியோ டீமாடுலேட்டர் கருவியிலிருந்து "ஆ" என்ற சத்தம் கேட்டது

தமிழ்மணத்தில் கொட்டை தின்று பழம் போட்டவர்கள், இதற்கு மேல் படிக்க தேவை இருக்காது.

இப்பதிவில் தமிழ்மணத்தில் திரைப்பட விமர்சனங்கள் எப்படி முன்வைக்கப்படுகின்றன மற்றும் அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.

விமர்சனங்கள் கீழ்க்கண்ட வகைப்படுகின்றன:
1) மொக்கை படம் கிடைத்தால் அடித்து துவம்சம் செய்வது
2) கண்களை மூடிக்கொண்டு படத்தை புகழ்வது/இகழ்வது
3) நல்ல படமாக இருந்தாலும் கூபாவில் இருக்கும் சிறிய இயக்குனர் டவுசரோ டர்தாழ் கூட இதை விட நன்றாக எடுப்பார் என்று கூறுவது
4) நல்ல படத்தில் உள்ள குறைகளை லென்ஸ் வைத்து பெரிதாக்கி பார்ப்பது
5) விமர்சனம் செய்யும் நோக்கத்துடன் படத்துக்கு செல்லும் வகையினரின் விமர்சனங்கள்
6) பின்நவீனத்துவ ஆராய்ச்சி குரூப்.
7) நானும் படம் பார்த்தேன் வகை

இதை எதிர்கொள்வது எப்படி?

முதலில் உங்கள் விருப்ப நாயகன்/நாயகி நடித்த படமா?
விமர்சனம் படிக்காமல் படம் பார்த்துவிடுங்கள், பின்னர் வந்து நாமும் விமர்சனம் போட்டு இடுகையை சூடாக்கலாம்

படம் நல்ல படமோ என்று மனதிற்குள் காடை சொல்கின்றதா?
முதல் விமர்சனம் வந்துவிட்டதா? முதல் மற்றும் கடைசி வரிகளை படியுங்கள்
பல விமர்சனங்கள் வருகின்றனவா? தலைப்பை மட்டும் படியுங்கள்.
என்ன புக்மார்க் செய்ய யோசிக்கிறீர்களா? வேண்டாம். பொறுங்கள். அனைத்து விமர்சன‌ங்களையும் பதிவு செய்து ஒரு இடுகை வரும். அதை புக்மார்க் செய்யுங்கள்.

படத்தை போய் பாருங்கள். நன்றாக இருக்கின்றதா? தயவு செய்து அதை கெடுக்காமல் நல்ல பிள்ளை போல் புக்மார்க் செய்த விமர்சனங்களை மட்டும் படித்துக்கொண்டிருங்கள்.
நன்றாக இல்லையா? தொடரட்டும் உங்கள் பதிவுலக சேவை

படம் மட்டமான படம் என்று தோன்றுகின்றதா?
சும்மா புகுந்து விளையாடுங்க. எல்லா விமர்சனத்தையும் ஒரு வார்த்தை விடாம படிங்க. எழுத்துப்பிழையைக் கன்டரிந்து பின்னூட்டம் போடுவது மிக முக்கியம். கொஞ்சம் நேரத்தில் படம் பார்க்காமலே ஒரு இடுகை இடும் அளவிற்கு உங்கள் பட அறிவு உயர்ந்துவிடும்.

இது தான் சரியான சமயம். காலை 10 மணிக்கு படத்தை பற்றி ஒரு பதிவிடுங்கள். பின்னூட்ட மட்டுறுத்தலை சற்று நேரம் அணைத்து விட்டு படத்துக்கு செல்லுங்கள். இப்படத்தை இதை விட யாராலும் ரசிக்க முடியாத அளவிற்கு படம் பிடித்துப்போகும்.

படம் முடிந்ததா? ஒரு மோர் அல்லது லெமன் ஜூஸ் குடியுங்கள். ஹேங் ஓவரை சற்று குறைக்கும்.

வீட்டுக்கு வந்து தமிழ்மணத்தை திறந்துபாருங்கள். உங்கள் இடுகை சூடான இடுகை ஆகியிருக்கும். உங்கள் பதிவை திறந்து பாருங்கள். பல பின்னூட்ட அனானிகள் மட்டரகமாய் வந்திருக்கும். அனைத்தையும் அழித்துவிட்டு மற்றவற்றைப்பாருங்கள். கண்டிப்பாக உங்கள் இடுகையில் பின்நவீனத்துவம் பற்றி ஒரு பெரிய கதாகாலட்சேபமே நடந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

படம் பற்றி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லையா?
லக்கிலுக் போன்றொரின் விமர்சனங்களை படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்.

ரொம்ப மொக்கை போடுகிறதா?
பழைய பட விமர்சனங்களை படித்துப்பாருங்கள். அதிலும் படத்தை பி.ஹெச்.டி செய்யும் அளவிற்கு இருக்கும் பதிவுகளை படித்துப்பாருங்கள். செம காமெடியாக இருக்கும்.

உன‌க்கேன் இவ்வளவு அக்கறை? ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை?
நானே பாதிக்கப்பட்டேன், நானே பதிவிடுகிறேன்.

சந்திரமுகியில் கமலும் நயன்தாராவும் 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்' என்று பாடிக்கொண்டிருந்த காலை வேளையில் கண் விழித்தேன். என்ன நேரம் அதுக்குள்ள தூக்கம் வேண்டிக்கிடக்கு என்று பொண்டாட்டியின் வசவோடு நாள் துவங்கியது.

வெய்ட் வெய்ட்...

சந்திரமுகியில் கமலா? வாட் த ஹெக்? ஓ ஏதாச்சும் ரீமிக்ஸ் போட்டிருப்பான் போல..

"சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க‌, சாப்பாடு வாங்கிட்டு வரணும் ஹோட்டல்ல இருந்து.."
"சரி சரி இதோ வந்துடறேன்"

ஏதோ இடிக்குதே! வாங்க போங்கனு மரியாதை எல்லாம்... என்ன இது புதுசா இருக்கு?

ம்ஹூம் ம்ம்ஹூம் ம்ஹூம் ம்ம்ஹூம் ம்ம்ம்ஹூஹூம்....(கொஞ்ச நேரம் பாட்டோட ஹம்மிங்).
கமல் கூட நயன்தாரா ஜோடியும் நல்லாத்தான் இருக்கு. ஆனா அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சதே இல்லயே!!! என்ன நடக்குது இன்னைக்கு?

"ஏய்"
...
"ஏய்"
...."இங்க நான் கூப்பிட்டுகிட்டு இருக்குறது காதுல விழுதா இல்லையா?"
"விழுது விழுது, இதே வேலையா போச்சு உங்களுக்கு. குளிக்க போகும்போது துண்டு கூட இல்லாம போறது....இந்தாங்க துண்டு"
"அட இதுக்கு கூப்பிடலடி. சந்திரமுகி படத்துல யார் நடிச்சது?"
...
சே பாத்ரூம் வரைக்கும் வந்த பொண்டாட்டிகிட்ட இதை போயா கேட்பாங்க. நல்ல சான்ஸ், டைமிங் மிஸ் ஆகிடுச்சு :( இன்னும் 14 மணிநேரம் இருக்கு.

"என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை..."
"என்ன பாட்டு பாடறீங்களா?"
"சே சே இல்லடி. அப்ப‌டி எல்லாம் நீ பாட மாட்டியா? அதிருக்கட்டும் சந்திரமுகில யாரு நடிச்சது?"
"என்ன ஆச்சு காலையில இருந்து? ஒரே பாட்டுதான், நயன்தாராதான்... ப்ராஜெக்டுக்கு வீட்ல இருந்து சப்போர்ட் குடுத்ததெல்லாம் போதும். என்ன செய்யறீங்கனு தெரியல‌"
"அம்மா தாயே, எனக்கு நயன்தாரா கதைஎல்லாம் வேண்டாம். சந்திரமுகி பாட்டுக்கு கமல் ஆடிகிட்டு இருந்தானே காலையில, எப்படி?"
"இதென்ன கதையா இருக்கு. கமல் படத்துல கமல் இல்லாம பின்ன என்ன ரஜினியா?"
"உனக்கென்னடி ஆச்சு?"

"காலையிலயே சினிமா கதை எதுக்கு? சரவணபவன் போய் காடை பிரியாணி வாங்கிட்டு வாங்க‌"

"என்ன கடுப்பேத்தாதடி ப்ளீஸ். சரவணபவன்ல காடை பிரியாணி?"
"என்னங்க ஆச்சு உங்களுக்கு? இப்போ என்ன ப்ரச்சினை?"
"சரவணபவன்ல எப்போதிலிருந்து காடை போட ஆரம்பிச்சாங்க? அதுவும் காலையில‌"
"இதுக்கா இவ்வளவு அலம்பல் பண்ணினீங்க? எனக்கு என்னங்க தெரியும். எப்போ NV போட ஆரம்பிச்சாங்களோ அப்போ"
"ஏய், சரவணபவன் ஒரு வெஜிடேரியன் ஹோட்டல் டி"
"அச்சோ நீங்க சரவணபவனையும் முனியாண்டி விலாஸையும் குழப்பிக்கிறீங்க. முனியாண்டி தான் வெஜிடேரியன். சீக்கிரம் வாங்கிட்டு வாங்க எல்லா வீட்லயும் தூங்கிட்டாங்க‌"

இனியும் நான் கத்தவில்லை என்றால் கதையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல முடியாது.
"என்ன நடக்குது காலையில இருந்து, சந்திரமுகியில ரஜினிக்கு பதிலா கமல் நடிக்கிறான், சரவண‌பவன் நான்வெஜிடேரியன் ஹோட்டல்னு சொல்ற, காலையில போய் தூங்கணும்னு சொல்ற. எனக்கு பைத்தியமா இல்லை உனக்கு பைத்தியமானு தெரியலயே?"

அந்த கடைசி வரியை நான் பேசியிருக்கக்கூடாது.

ஓவர் டூ கீழ்ப்பாக்கம்.

டாக்டர் என்று சொல்லப்பட்டு என்முன் உட்கார்ந்திருப்பவர் வக்கீல் போல் கருப்புகோட் அணிந்திருக்கிரார். இதைச்சொன்னால் நம்மை பைத்தியக்காரன் என்பார்கள்.
"இவருக்கு வந்துருக்க பிரச்சினை இப்போ பரவலா வந்துகிட்டு இருக்கு. IT field ‍ல இருக்கிறவர்களுக்கு இது அதிகமா தாக்குது. அவங்களா ஒரு virtual உலகத்துல வசிப்பாங்க. அவங்க நினைச்சிகிட்டு இருக்க உலகம்தான் கரெக்ட்னு சொல்லுவாங்க..............."

போதும்யா போதும்.

இதை விட எவனாலும் தெளிவா விளக்கமுடியாது.

"என்னங்க நீங்க கொஞ்ச நாள் ஆஃபீஸ்லாம் போகாதீங்க."
"சரி"
"நல்லா ரெஸ்ட் எடுத்துக்கங்க‌"
"சரி"
"என்னங்க சரியா பேசவேமாட்றீங்க? என்னை ஞாபகம் இருக்குல்ல?"
"ஞாபகம் இல்லாமலா... நீ என் பொண்டாட்டி"
"அய்யோ அய்யோ என் தலைஎழுத்து இப்படி ஆகிடுச்சே. தொட்டு தாலி கட்டின வப்பாட்டியை வாய் கூசாம பொண்டாட்டினு சொல்றாரே? ஏதாவது பொண்டாட்டி கிண்டாட்டி வச்சிகிட்டு இருக்கீங்களா எனக்கு தெரியாம?"
_____o0o______

அப்பாடா... ஒரு மாதிரியா ஒரு கதைங்கற பேர்ல ஒன்றை எழுதியாச்சு. ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்னு தெரியலை. டிவியில வழக்கம் போல மொக்கை சீரியல் தானா?

"உலகத்த்த்தொலைக்காட்சிகளில் ம்ம்ம்முதன்முறையாஹ கமல் நயன்தாரா இணைந்து கலக்கிய சந்திரமு......."



Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.